வெடிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ? - பரிசோதனைகள் ஆரம்பம் என்கிறார் லசந்த அழகியவன்ன

By T. Saranya

26 Nov, 2021 | 03:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சமையல் எரிவாயு சிலிண்டர் கலவை மற்றும் தரம் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றினைந்து பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. 

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பான சர்ச்சைக்கு இன்னும் இரண்டு வாரகாலத்திற்குள் தீர்வு முன்வைக்கப்படுவதுடன் எரிவாயு சிலிண்டரின் தரம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,            

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் வருடத்திற்கு 350 இலட்சம் சிலிண்டர்களை விநியோகிக்கிறது. அவற்றில் ஐந்து அல்லது ஆறு விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

2015 ஆம் ஆண்டு முதல் லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களின் ஊடாக வீடுகளில் 12 விபத்துக்களும் , வியாபார நிலையங்களில்  9 விபத்துக்களும், எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையங்களில் 2 விபத்துக்களும் பதிவாகியுள்ளன. எரிவாயு சிலிண்டர் வெடிப்பு காரணமாக விபத்து சம்பவிக்காத நாடுகள் எவையும் கிடையாது.

சமையல் எரிவாயு சிலிண்டர் பாவனையின் போதான ஆபத்துக்களிலிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்காக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை 2012 ஆம் ஆண்டு 5 வர்த்தமானி அறிவித்தல்களையும் , எரிவாயு சிலிண்டரின் தரம், எரிவாயு குழாய் தரம் மற்றும் எரிவாயு சிலிண்டரில் பொருத்தப்பட்டுள்ள இணைப்புக்களின் தரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது.

எரிவாயு சிலிண்டரின் கலவை மற்றும் தரம் தொடர்பில்  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும், தனியார் நிறுவனமும் ஒன்றிணைந்து பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். எரிவாயு சிலிண்டர் தொடர்பில் காணப்படும் சர்ச்கைக்கு இன்னும் இரண்டு வார காலத்திற்குள் தீர்வு முன்வைக்கப்படும்.

அத்துடன் எரிவாயு சிலிண்டரின் தரத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியிடல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பிலான சட்டத்தை அமுல்படுத்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன  எரிவாயு சிலிண்டர் வெடிப்பு மற்றும் அதனால் ஏற்படும் விபத்துக்களை முழுமையாக இல்லாதொழிப்பது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்.

லிட்ரோ ரக சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுவனம் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டருக்கு பதிலாக 18 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. அதற்கு லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்ட விடயங்களை நுகர்வோர் அதிகார சபை ஏற்றுக் கொள்ளவில்லை. 

அவ்விடயம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை முறையான நடவடிக்கைகளை முன்னெடுத்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட 18 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர்கள் அனைத்தையும் கைப்பற்றியது. 

லிட்ரோ நிறுவனம் 18 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரை சந்தைக்கு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை ஏனெனில் அதன் தரம் குறித்து பல சர்ச்சைகள் தோற்றம் பெற்றுள்ளன.

 சந்தையில் தற்போது 18 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் கிடையாது 12.5 கிலோகிராம்,5 கிலோகிராம் மற்றும் 2.30 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே காணப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right