(ஆர்.யசி.,எம்.ஆர்.எம்.வசீம்)

அரச ஊடக நிறுவனங்கள் திறைசேரிக்கு சுமையாக இல்லாதவாறு செயற்படும் வகையில் விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்படும்,அத்துடன் ஊடகத் துறையை நவீன மயப்படுத்தி காலத்துக்குப் பொருத்தமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என ஊடகத்துறை அமைச்சர்  டலஸ்  அழகப்பெரும  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு,பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு,வெகுசன  ஊடக அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஊடகவியலாளர்கள் பல்வேறு குறைபாடுகள் மற்றும் சவால்களை எதிர்நோக்கும் நிலையில் அவர்களுக்கான முறையான பயிற்சிகள் இல்லாமை பெரும் குறைபாடாக உள்ளது. அதற்கிணங்க அனைத்து ஊடகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஊடகவியலாளர்களின் செயற்பாட்டினால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகமாக காணப்படுகின்றன.

அவற்றை கருத்தில் கொண்டு பல்கலைக் கழகங்கள் பாடசாலைகள் ஊடாக சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்குவதே எமது நோக்கம் எமது பாட விதானங்களில் ஊடகம்  தொடர்பில் விடயங்கள் இருந்தாலும் அது தொழில் ரீதியான ஊடகவியலாளர்களை உருவாக்குவதாகவே அமைந்துள்ளது.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் உள்ள அதிகாரம் தொடர்பில் குறிப்பிடும்போது உலகில் நான்காவது அரசாங்கமாக ஊடகங்கள் குறிப்பிடப்படுகின்றன.

நான் ஊடகத்துறை அமைச்சு பொறுப்பேற்று 98 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருடன் இணைந்து நாம் இந்த குறுகிய காலத்தில் பல திட்டங்களை முன் வைத்துள்ளோம்.

ஜனாதிபதி விருது விழாவை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அத்துடன் ஊடகவியலாளர்களின் தொழில் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் அசிதசி காப்புறுதி திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். 

எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரின் தலைமையில் இடம்பெறும் விசேட நிகழ்வில் அந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதற்கான நிதி இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை  பெற்றுக் கொடுப்பதற்காக பட்டய ஊடக கற்கை நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன் முதற்கட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என்றார்.