( எம்.எப்.எம்.பஸீர்)

' பயங்கரவாத தாக்குதலொன்று நடாத்தப்படலாம் என  கிடைக்கப் பெற்ற தகவலை, பல நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பு செயலர் மற்றும்  பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தேன். எனினும்  ஏப்ரல் 20 ஆம் திகதிவரை தக்குதல் நடாத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. 

எனினும்  ஏப்ரல் 21 ஆம் திகதி முற்பகல்  தாக்குதல் நடாத்தப்படும் என்ற தகவலை, மிக்க பொறுப்புடன் சில மணி நேரங்களுக்கு முன்னர் நான் வழங்கிய நிலையில்,  அதனை தடுக்காமைக்கான பொறுப்பினை என்னால் ஏற்க முடியாது.' 21/4 உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை  தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு,  முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிரி பெர்னாண்டோ  ஆகியோருக்கு எதிராக  தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு வழக்குகளின் பிரதான சாட்சியாளரான முன்னாள் அரச உளவுச் சேவையின் பணிப்பாளரும்தற்போதைய  மத்திய மாகாண சிரேஷ்ட பிர்திப் பொலிச் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன  தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க விஷேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்குகளானது   கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான, மேல் நீதிமன்றின் ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹம்மட் இஸ்ஸதீன் ஆகியோர்  அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  நேற்று (25) மூன்றாவது நாளாகவும் விசாரிக்கப்பட்டது.  இதன்போதே முறைப்பாட்டாளர் தரப்பின் சார்பிலும், பிரதிவாதியின் தரப்பு குறுக்குக் கேள்விகளுக்கு பதிலளித்தும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன இவ்வாறு சாட்சியமளித்தார்.

நேற்றைய விசாரணையின் போது, பிரதிவாதி முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன,

 '  பயங்கரவாத தாக்குதலொன்று நடாத்தப்படலாம் என  கிடைக்கப் பெற்ற தகவலை, பல நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பு செயலர் மற்றும்  பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தேன்.   ஏப்ரல் 21 ஆம் திகதி முற்பகல்  தாக்குதல் நடாத்தப்படும் என்ற தகவலை, மிக்க பொறுப்புடன் சில மணி நேரங்களுக்கு முன்னர் நான் வழங்கிய நிலையில்,  அதனை தடுக்காமைக்கான பொறுப்பினை என்னால் ஏற்க முடியாது.

ஏப்ரல் 20 ஆம் திகதிவரை, தாக்குதல்  நடாத்தப்படும் எனும் நம்பிக்கை இருக்கவில்லை. இந்த தாக்குதலுக்கான ஆடைகள் கூட 16 ஆம் திகதியே கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. அப்படி இருக்கையில்  எனக்கு 4 ஆம் திகதி கிடைத்த தகவல் தொடர்பில் எவ்வாறு பூரண நம்பிக்கை கொள்ள முடியும். ' என சாட்சியமளித்தார்.

இதன்போது குறுக்கிட்ட  பிரதிவாதி சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன், உளவுச் சேவை பிரதானியே 20 ஆம் திகதி தான் உளவுத் தகவல் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்திருப்பின் , மற்றையவர்கள் தொடர்பில் என்ன கூற வேண்டி உள்ளது என கேள்வி எழுப்பினார்.

' நான் உளவுத் துறை பிரதானியாக இருப்பினும், நாளை தாக்குதல் நடக்கும் எனக் கூறி ஊரடங்கை பிறப்பித்தால் தாக்குதல் நடந்தாலும், நடக்காவிட்டாலும்  இறுதியில்  நானே குற்றவாளியாவேன்.' என அதற்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன குறிப்பிட்டார்.

இந் நிலையில் தொடர்ந்தும் ஜனாதிபதி சட்டத்தரனி மொஹான் வீரகோனின் குறுக்குக் கேள்விகளுக்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் பொலிச் மா அதிபர் நிலந்த ஜயவர்தன தெரிவித்ததாவது,

' 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த் தாக்குதலை மையப்படுத்தி, தாக்குதல் ஒன்று நடக்கலாம் என  ஏபரல் 4 ஆம் திகதி தகவலளித்த தரப்பே ஏப்ரல் 20 ஆம் திகதி மாலை 4.12 இற்கு மீளவும் தகவல் அளித்தது. அந்த உளவுத் தகவல் தொடர்பில் நான் உடனடியாக பாதுகாப்பு செயலர், பொலிஸ் மா அதிபரை தெளிவுபடுத்தினேன்.  நாட்டில் ஊரடங்கை பிறப்பித்தோ, நாட்டை முடக்கியோ அதனை தடுக்காமை எனது பலவீனமல்ல.

பாதுகாப்பு செயலர்கள் மாதத்துக்கு மாதம் மாறினாலும், அரச உளவுச் சேவை வழங்கும் உளவுத் துறை அறிக்கைகளை சரியாக கையேற்காமையின் பொறுப்பை நான் ஏற்க முடியாது.  எனக்கு கிடைக்கும் உளவுத் தகவல்களை நான் நேரடியாக பாதுகாப்பு செயலருக்கே  வழங்கினேன். ' என தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன்,  சாட்சியாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவ்ர்தனவிடம், தேசிய உளவுச் சேவையில் சேவையாற்றும் 1300 , 1400 பேர் தொடர்பில் எவ்வளவு நிதி செலவிடபப்டுகிறது என வினவினார்.

 குறித்த கேள்விக்கான பதில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ளதால், அதற்கான பதிலை வழங்க முடியாது என இதன்போது சாட்சியாளர் கூறினார்.

இதன்போது நீதிபதிகள் குழாமும் அந்த கேள்வியை தொடுப்பதற்கு அனுமதி மறுத்தது.

இதனைவிட நேற்று, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன  டி சில்வாவின் நெறிப்படுத்தலில் சாட்சியமலிக்கும் போது, சாட்சியாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன தெரிவித்ததாவது,

' தேசிய உளவுச் சேவை என்ற ரீதியில் நாம் முன்னெடுப்பது உளவுத் துறை நடவடிக்கைகளாகும்.  நாம் வழங்கும் தகவல்களுக்கு அமைய  நடவடிக்கை முன்னெடுப்பது எமது பொறுப்பல்ல. தடுத்தல் மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது பொலிஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் போன்றவற்றின் வேலையாகும்.

சஹ்ரான் ஹஷீம் யார், அவரது நோக்கம் என்ன என்பது தொடர்பில் பல வருடங்களாக தேசிய உளவுச் சேவை  பாதுகாப்பு செயலர்கள், பொலிஸ் மா அதிபர்களுக்கு தகவல் அளித்துள்ளது.  அதனால் சஹ்ரான் யார் என பாதுகாப்புத் தரப்பினருக்கு விளக்கம் உள்ளது.  எனக்கு சஹ்ரானின் மனதை படிக்க முடியாது. உளவுத் துறை அதிகாரியாக, எமக்கு கிடைக்கும் தகவல்களை உரிய தரப்பினருக்கு வழங்குவதையே செய்ய முடியும்.  இந்த தாக்குதல்கள் இடம்பெறும் போது ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லை.  எனவே பாதுகாப்பு செயலருக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பொறுப்பு உள்ளது.  நான் எனக்கு கிடைத்த உளவுத் தகவலை,  தாக்குதலுக்கு முன்னைய தினம், அதாவது 20 ஆம் திகதி மாலை 4.53 மணிக்கு  அறிவித்தேன். அதற்கு முன்னர் பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசி அழைப்பொன்றினை எடுத்து தெரிவித்தேன்.

 பொலிஸ் மா அதிபர் நான் கொடுத்த உளவுத் தகவல் தொடர்பில் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை என எனக்கு தோன்றியதால், பாதுகாப்பு செயலருக்கு அழைப்பெடுத்த போது, ' பொலிஸ் மா அதிபர் தகவல் தொடர்பில் பாரதூரமாக சிந்திக்கவில்லை என தெரிகிறது. எனவே நடவடிக்கை எடுங்கள் ' என கூறினேன்.  என சாட்சியமளித்தார். இந் நிலையில் மேலதிக சாட்சி விசாரணைகள் இன்று (26)  வரை ஒத்தி வைக்கப்பட்டது.

 இந்த விவகாரத்தில்  வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில்,   முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கை அரச சட்டவாதிகலான ஹங்ச அபேரத்ன, தமித்தினீ டி சில்வா, சஹன்யா நரம்பனாவ ஆகியோருடன் பிரதி சொலிசிட்டர் ஜெனரால்  திலீப் பீரிஸ் நெறிப்படுத்தினார்.

முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறிக்கு எதிரான வழக்கை சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர்  ஜெனரால் சுதர்ஷன டி சில்வா நெறிப்படுத்தினார்.

இந்த விவகாரத்தில் பிரதிவாதி பூஜித் ஜயசுந்தர்வுக்காக,  சட்டத்தரனிகளான  துலான் மிரிஹான, பிரியங்க குணரத்ன, நிர்மல கொடித்துவக்கு, ஜயந்த திலகரத்ன ஆகியோருடன் சிரேஹ்ச்ட சட்டத்தரணி ரொஷான் தெஹிவள ஆஜரானார்.

 ஹேமசிறி பெர்ணான்டோவுக்காக ஜனாதிபதி சட்டத்தரனி மொஹான்  வீரகோன் முன்னிலையானார்.