மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக பல இடங்களில் தாழ் நிலப்பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வியாழக்கிழமை (25) காலை 8.30 மணிவரையான 48 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு, மாவட்டத்தில் 119.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நாவற்குடா, ஆரையம்பதி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு, காத்தான்குடி, கிரான்,  உட்பட பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீர் தேங்கியுள்ளால் போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக மண்டூர் - வெல்லாவெளி பிரதான பாதையூடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த வீதியூடாக பாடசாலைகள், அலுவலகங்களுக்கு செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன் போரதீவுப்பற்று பிரதேச சபையினால் விசேட போக்குவரத்து ஓழுங்குகள் செய்யப்பட்டன.

இதேபோன்று காக்காச்சிவட்டை-ஆணைக்கட்டியவெளி பிரதான வீதியும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகள் ஊடாக வெல்லாவெளி பொலிஸாரும் போரதீவுப்பற்று பிரதேசசபையும் இணைந்து மக்களை பாதுகாப்பாக பயணிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதை காணமுடிந்தது.

இதேபோன்று ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடற்படையினராலும் இராணுவத்தினராலும் விசேட படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்கள், அலுவலகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.