விவசாய நிலங்களை விவசாய விளை நிலங்களாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 'டைட்டில்' என்ற பெயரில் திரைப்படமொன்றை தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் ரகோத் விஜய் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'டைட்டில்'. இந்தப்படத்தில் விஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அஸ்வினி சந்திரசேகர் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் மைம் கோபி, மாரிமுத்து, ரோபோ சங்கர், மதுமிதா, பிளாக் பாண்டி, ரேகா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். எம். தங்கபாண்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அனல் ஆகாஷ் இசையமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 

''விவசாய நிலங்களை என்ஆர்ஐ எனப்படும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் மற்றும் கொர்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கு ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி குறைந்த விலைக்கு வாங்கி கொடுக்கும் கும்பலுக்கும், விவசாயத்தை மேன்மையாகவும், மண்ணை தெய்வமாகவும் நினைக்கும் குடும்பத்திற்கும் இடையே நடைபெறும் பிரச்சனைகளும். அது தொடர்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் பரபர திரைக்கதை. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது'' என்றார்.

'டைட்டில்' படத்தை டி.பி.கே இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டில்லிபாபு தயாரித்திருக்கிறார். விவசாயத்தின் வலிமையை முன்னிறுத்தும் இந்த படத்திற்கு 'டைட்டில்' என ஆங்கிலத்தில் பெயர் இருப்பதால், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.