கொவிட்-19 வைரஸின் புதிய மாறுபாட்டினை கண்டறிந்துள்ளதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.

புதிதாக கண்டறியப்பட்ட கொவிட் மாறுபாடு B.1.1.529 என விஞ்ஞானிகளினால் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அந் நாடு சுகாதார அமைச்சர் ஜோ ஃபாஹ்லா வியாழன்று கூறினார்.

புதிய மாறுபாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் போட்ஸ்வானா, தென்னாபிரிக்கா மற்றும் தென்னாபிரிக்காவில் இருந்து ஹொங்கொங் சென்ற பயணி ஒருவரிடமிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில் தென்னாபிரிக்காவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு பற்றி விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் வைரஸ் பரிணாம வளர்ச்சிக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (TAG-VE) வெள்ளிக்கிழமை கூடுகிறது.

இதுவரை உலக சுகாதார அமைப்பு கொவிட் வைரஸின் நான்கு வகைகளை மாத்திரமே கண்டறிந்துள்ளது.

ஆல்பா (பி.1.1.7), பீட்டா (பி.1.351), காமா (பி.1) மற்றும் டெல்டா (பி.1.617.2) ) என்பன அவை ஆகும்.

இந் நிலையில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 மாறுபாட்டுடன் தொடர்புடைய அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் இல்லாதொழிக்க முடியும்.

அத்துடன் புதிய மாறுபாடு மிகவும் பரவக்கூடியதாக இருக்கலாம் என்று தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் இந்த வாரம் ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்தனர்.