( எம்.எப்.எம்.பஸீர்)

அரச புலனாய்வு சேவையின்  பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே,  அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்டோரினால் நடாத்தப்பட்ட சூம் கலந்துரையாடலை மையப்படுத்தி  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாடு தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில்  சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக சி.ஐ.டி. நேற்று ( 25) நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

அந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறையடையவில்லை எனவும், அது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளுக்கு சட்ட மா அதிபரின் ஆலோசனை அவசியமாவதாகவும்  சி.ஐ.டி. கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகலவுக்கு அறிவித்தது.

Rev. Cyril Gamini gives 7-hour statement to CID - Nation Online

இந்த விடயம் தொடர்பிலான நீதிவான் நீதிமன்ற வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில்  ஆராயப்பட்டது. 

இதன்போதே சி.ஐ.டி.ல் சார்பில் மன்றில் ஆஜரான பிரதான பொலிஸ் பரிசோதகர் மாதவ குணவர்தன இதனை அறிவித்தார்.

இந் நிலையில் இந்த விவகார விசாரணைகளை விரைவாக நிறைவு செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற இணையத்தள மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்கத்திடம் முறையிட்டிருந்தார்.

அந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1),(2) ஆம் உறுப்புரைகள்  பிரகாரமும், தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயங்களின்  கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.