(இராஜதுரை ஹஷான்)

சமையல் எரிவாயு சிலிண்டர் கலவை மற்றும் தரம் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றினைந்து பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. 

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பான சர்ச்சைக்கு இன்னும் இரண்டு வாரகாலத்திற்குள் தீர்வு முன்வைக்கப்படுவதுடன் எரிவாயு சிலிண்டரின் தரம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் வருடத்திற்கு 350 இலட்சம் சிலிண்டர்களை விநியோகிக்கிறது. அவற்றில் ஐந்து அல்லது ஆறு விபத்துக்கள் பதிவாகியுள்ளன. 

2015 ஆம் ஆண்டு முதல் லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களின் ஊடாக வீடுகளில் 12 விபத்துக்களும் , வியாபார நிலையங்களில்  9 விபத்துக்களும், எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையங்களில் 2 விபத்துக்களும் பதிவாகியுள்ளன. எரிவாயு சிலிண்டர் வெடிப்பு காரணமாக விபத்து சம்பவிக்காத நாடுகள் எவையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.