(எம்.எப்.எம். பஸீர்)

குஷ் என அறியப்படும் ஒருவகை கஞ்சா  போதைப் பொருள் அடங்கிய 10 பொதிகளை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர்  இன்று கைப்பற்றியுள்ளனர். 

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்று நிலையத்தில் வைத்து, இவைக் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் ( சட்டம்) சுதத்த சில்வா கூறினார்.

சுமார் 1300 கிராம் நிறை உடைய இந்த பொதிகள்,  சுங்கப் பிரிவின் தடை அகற்றல் சான்றிதழ் பெறுவதற்காக, மத்திய அஞ்சல் பரிமாற்று நிலையத்தில் வைக்கப்பட்டிருந்துள்ளது. இந் நிலையிலேயே, சுங்கப்  உளவுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இப்பொதிகள்  சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 இந்த பொதிகள், கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து, இலங்கையின்  ராகம, பேலியகொட, கண்டி, கொழும்பு மர்றும் அஹங்கம பகுதிகளை குறிப்பிடும் போலி முகவரிகளுக்கு அனுப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 இந் நிலையில் கைப்பற்றப்பட்ட குஷ் போதைப் பொருள், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள்  தடுப்பு பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.