(எம்.மனோசித்ரா)

இளைஞர்கள் யுவதிகள் தலைமைத்துவத்தை ஏற்று முன்னோக்கிச் செல்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு இறுதியாகும் போது பெருமளவான இளம் தலைமுறையினரை ஒன்றிணைத்து நாம் முன்னோக்கிச் செல்வோம். எதிர்காலம் தொடர்பில் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மூன்றாம் மாத நினைவு தினம் வியாழக்கிழமை (25) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசியலில் ஆர்வமுடைய , எதிர்காலத்தைப்பற்றி தொலைநோக்கான சிந்தனையுடைய இளைஞர் யுவதிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு நானும் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் செயற்பட்டோம். அதற்கான வேலைத்திட்டங்களையும் செயற்படுத்தினோம்.

எனினும் அவர் கொவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்தார். எவ்வாறிருப்பினும் அவரது இலக்கினை நிறைவேற்றுவதற்கு அனைவரும் செயற்பட வேண்டும்.

தற்போது அரசியலில் ஆர்வம் செலுத்துகின்ற பெரும்பாலான இளைஞர் யுவதிகள் உள்ளனர். இவ்வாறான நிலையில் எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே நாம் அவருக்காக செய்யக் கூடிய சேவையாகும். இதற்காக இளைஞர்கள் முன்வந்து பொறுப்புக்களை ஏற்க வேண்டும்.

இளைஞர்கள் யுவதிகள் தலைமைத்துவத்தை ஏற்று முன்னோக்கிச் செல்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு இறுதியாகும் போது பெருமளவான இளம் தலைமுறையினரை ஒன்றிணைத்து நாம் முன்னோக்கிச் செல்வோம் என்றார்.