(இராஜதுரை ஹஷான்)

மத்தள விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்றும் அளவிற்கு வங்குரோத்து நிலைக்கு சென்ற நல்லாட்சி அரசாங்கம் முடிந்த அளவிற்கு அரச முறைகடன்களை பெற்றதே தவிர நாட்டுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவில்லை ராஜபக்ஷர்களை பழிவாங்கும் நோக்கில் மத்தள விமான நிலையம் நெற்களஞ்சியமாக்கப்பட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்திற்கமைய நிர்மானிக்கப்பட்ட புதிய விமான சேவை பிரிவு மற்றும் உப விமான ஓடுபாதை திறப்பு  விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆசியாவின் கேந்திர விமான நிலையமாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை அபிவிருத்தி செய்யும் தீர்மானம் 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

நடைமுறைக்கு பொருந்தும் வகையில் விமானநிலையத்தை அபிவிருத்தி செய்யும் தேவை காணப்பட்டது.எதிர்கால தேவைகளை கருத்திற் கொண்டு அபிவிருத்தி செயற்திட்டம் வகுக்கப்பட்டது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சுவா அபே தலைமையில் கைச்சாத்திடப்பட்டது.   

அபிவிருத்தி பணியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு முதலீட்டாளர்களுடன்  ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்த வேளையில் 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை இரண்டு கட்டமாக நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அபிவிருத்தி செயற்திட்ட பணிகள் குறித்து கவனம் செலுத்தவில்லை.2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் முதல்கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இதுவரை 25 விமான நிறுத்தல் தளங்கள் காணப்பட்டது தற்போது அது 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு வருடத்திற்கு சுமார் 6மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தில் சேவை பெறுகிறார்கள்.2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் சேவை பெறுநர்களின் எண்ணிக்கை 15 மில்லியமான அதிகரிக்க கூடும்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயங்கரவாதிகள் முன்னெடுத்த தாக்குதலை மறக்க முடியாது.அவ்வாறான சூழ்நிலையில் இலங்கைக்க வந்துக் கொண்டிருந்த விமானங்களை வேறு விமான நிலையத்திற்கு அனுப்பும் வசதி நாட்டில் காணப்படவில்லை அதனால் அயல்நாடுகளுக்கு அந்த விமானங்களை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.நாட்டுக்கு மேலதிகமாக ஒரு சர்வதேச விமான நிலையம் அவசியம் என்பதை அன்று உணர்ந்தேன் அதற்கமைய எமது அரசாங்கத்தினால் மத்தள விமான நிலையம் உருவாக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் மத்தள விமான நிலையத்தை பொருளாதார முன்னெற்றத்திற்கு இணைத்துக் கொள்ளாமல் ராஜபக்ஷர்களை பழிவாங்குவதற்காக நெற்களஞ்சியமாக்கியது அந்த அளவிற்க வங்குரோத்து தன்மையுடன் செயற்பட்ட நல்லாட்சி அரசாங்கம் முடிந்தளவி;ற்கு அரச முறை கடன்களை பெற்றுக் கொண்டது ஆனால் நாட்டுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவில்லை.

30வருட கால சிவில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து  சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முன்னேற்றமடைந்தது.கொவிட் தாக்கத்தினால் பாதிக்கபட்ட சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மீள கட்டியெழுப்புவதற்கு அமைச்சு மட்டத்தில் சிறந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சுற்றுலாத்துறை சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது என்றார்.