(ஆர்.யசி.,எம்.ஆர்.எம்.வசீம்)

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடருமானால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எமக்கு எதிரான பிரேரணைக்கு பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படும். 

சிறுபான்மை சமூகங்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கும் அரசாங்கத்துக்கு ஒருபோதும் சர்வதேசத்தினால் நிதி கிடைப்பதில்லை.

அதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணைகளுக்கு பதிலளிக்க தயாராகிக்கொண்டு செல்லவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தோல்லிக்கு காராணத்தை வெளிப்படுத்தினார் லக்ஷ்மன் கிரியெல்ல |  Virakesari.lk

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு,பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு,வெகுசன  ஊடக அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 

பொதுஜன பெரமுன ஆட்சிக்குவந்த அனைத்து காலங்களிலும் சர்வதேசத்துடன் பிரச்சினை ஏற்படுத்திக்கொண்டு வந்திருக்கின்றது.

அது ஏன் என்று எமக்கு தெரியாது. மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்த 2012,2013,2014 காலப்பகுதியில் தொடந்து மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் சபை எமக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்திருந்தது.

2015இல் எமக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்க நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு வரும் நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஷ் அவரது காட்சிக்காலத்து முன்னரே 2015இல் ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றார். என்றாலும் அதில் நாங்கள் வெற்றிபெற்று, சர்வதேசத்தின் நன்மதிப்பை பெறும்வகையில் செயற்பட்டோம். அதனால் எமக்கு எதிரான தடை இல்லாமல்போனது.

ஆனால் தற்போதும் கோட்டாபய ராஜபக்ஷ் அரசாங்கமும் மஹிந்த ராஜபக்ஷ் சென்ற வழியிலேயே செல்கின்றது. இந்த அரசாங்கத்தின் முதலாவது வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எமக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்தது. அதில் நாங்கள் பாரியளவில் தோல்வியடைந்தோம்.

மத்திய கிழக்கு நாடுகளும் எமக்கு எதிராக வாக்களித்திருந்தன. அதனால் அமைச்சர் ஜீஎல் பீரிஸ் அடுத்த முறை மனித உரிமை பேரவைக்கு செல்லும்போது எமக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தவேண்டும்.

குறிப்பாக அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது, சிவில் நடவடிக்கைகளுக்கு ராணுவத்தினரை நியமிப்பது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணை அனுமதிக்கப்பட்ட பின்னர் நிறுவனங்களின் தலைவர்களாக அதிகம் நியமிக்கப்பட்டது ராணுவத்தினராகும்.

ஏனைய நாடுகள் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவர் வைத்தியர் ஒருவரை நியமிக்கும்போது எமது நாட்டில் ராணுவ தளபதியே அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார். அதனால் இதற்கு பதிலளிக்க தயாராகியே அடுத்த கூட்டத்தக்கு செல்லவேண்டும்.

அடுத்தவிடயம்தான் நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்கவேண்டும் என்பதாகும். 20ஆம் திருத்தம் மூலம் நீதிமன்ற சுயாதீனம் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் புதிய அரசியலமைப்பினூடாக சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாவது அமைச்சர் மனித உரிமை பேரவைக்கு தெரிவிக்கவேண்டும்.

சுயாதீன நீதிமன்றம் அமையாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களை எதிர்பார்க்கமுடியாது. இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார். அதில் நம்பிக்கை ஏற்படுவதில்லை.

அதேபோன்று சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகள். கொவிட் தொற்றுக்குள்ளாகி முஸ்லிம் இனத்தவர் ஒருவர் மரணித்தால் அந்த சடலம் 150 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்றே அடக்கம் செய்யப்படவேண்டி இருக்கிள்றது. இது அந்த சமூகத்துக்கு வழங்கும் தண்டனை.

முஸ்லிம் மக்கள் பல நூறு வருடங்கள் எம்முடன் இணைந்து வந்தவர்கள். கண்டியில் இருக்கும் சில முஸ்லிம்களின் பெயரின் முதல் எழுத்து சிங்கள பெயராகவே இருக்கின்றது.  எமது அரசாங்கத்தில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை மதித்து நடப்பதை நாங்கள் உள்ளத்தால் காட்டி இருக்கின்றோம்.

குறிப்பாக தேசிய கீதத்தின் ஒரு பகுதியை நாங்கள் தமிழ் மொழியில் இசைத்தோம். அதன் மூலமே சர்வதேச சமூகத்துக்கு எம்மீது நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் சிறுபான்மை சமூகங்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கும் அரசாங்கத்துக்கு ஒருபோதும் சர்வதேசத்தினால் நிதி கிடைப்பதில்லை அதனை நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

மேலும் யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவுகூரும் நடவடிக்கை சர்வதேச நாடுகளிலும் இடம்பெறுகின்றது. ஜே.வி.பி கலவரத்தில் மரணித்தவர்கள் இன்றும் நினைவுகூரப்படுகின்றனர். அப்படியாயின் யுத்தத்தில் மரணித்தவர்களை தமிழ் மக்கள் நினைவுகூர நினைவு தூபி அமைப்பதை தடைசெய்வது, அவர்களை அச்சுறுத்துவதை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்திருக்கின்றது.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் திருப்தியில்லை என கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை தெரிவித்திருக்கின்றார். அதேபோன்று அதுதொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தெரிவுசெய்யப்பட்டே நிறைவேற்றப்படுகின்றன.

குற்றப்புலனாய்வு பிரிவில் சதித்திட்டம் இருப்பதாகவும் கர்தினால் மெல்கம் ஆண்டகை தெரிவித்திருக்கின்றார். அவரின் கூற்று உண்மை. ஏனெனில் தாக்குதல் இடம்பெறுவதற்கு 4 நாட்களுக்கு முன்னரே அது தொடர்பான தகவல் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்திருந்தும் அதன் பிரதானி நிலந்த ஜயவர்த்தன, அதுதொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை என்றால் அது சதித்திட்டம் இல்லையா ? ஆனால் தகவல் கிடைத்த முதலாவது நபர் இன்று சாட்சியாளராகி இருக்கின்றார். நிலந்த ஜயவர்த்தனவுக்கு வழக்கு தொடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை செய்திருக்கின்றது. அதனை செய்வதில்லை.

அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கின்றது. அவர்கள் தெரிவிக்கும் திருத்தம் நியாயமானது.

ஏனெனில் கைதுசெய்யப்படுபவரை 24மணி நேரத்துக்குள் நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தவேண்டும் என தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று தடுப்புக்காவலில் கட்டளையில் 19 மாதங்கள் தடுத்துவைக்கலாம். அதனை குறைக்குமாறே தெரிவிக்கின்றனர். இந்த திருத்தங்களை கொண்டுவந்தால், அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்.

அத்துடன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. அதனால் எமது கட்ன் தவணைகளை நீடித்துக்கொள்ள சர்வதேசத்துடன் கலந்ரையாடவேண்டும். இந்த நிலை நீடித்தால் மார்ச் மாதமாகும்போது சிவில் யுத்தம் ஒன்று ஏற்படும் என்றார்.