(ரொபட் அன்டனி) 

இலங்கையின் ஜனநாயக   மற்றும் பொருளாதார  மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்யும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் தெரிவித்தார். 

அமெரிக்க யுஎஸ்எய்ட்  நிறுவனத்தின் ஏற்பாட்டில்  கொழும்பில் கிங்கஸ்பரி ஹோட்டலில்  நேற்று ஆரம்பமான அரச தனியார் ஒத்துழைப்பு தொடர்பாக ஆராயும்  தேசிய மாநாட்டில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப்  இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரச தனியார் ஒத்துழைப்பு மாதிரியை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மக்களிற்கும் அரசாங்கத்திற்கும் உதவுவது குறித்து அமெரிக்க அரசாங்கம் மகிழ்ச்சிகொண்டுள்ளது. 

கடந்த  60 வருடங்களாக நாங்கள் செயற்பட்டுள்ளது போன்று இல்ஙகை மக்களின் வாழ்க்கையில்   எதிர்காலத்திற்கு உதவுவதற்கு மனிதாபிமான அபிவிருத்தியை நாங்கள் தொடர்ந்தும் வழங்குவோம்.  இன்று வரை அமெரிக்க அரசாங்கம்  2 பில்லியன் டொலர்கள் வரை பல அபிவிருத்திதிட்டங்களிற்கு வழங்கியுள்ளது.விவசாயம், கல்வி, சுகாதாரம், வர்த்தகம், நல்லாட்சி மனிதாபிமான உதவி ஆகிய பல துறைகளில் இவற்றை வழங்கியுள்ளது.

தற்போது அரச தனியார் ஒத்துழைப்பு செயற்பாடு குறித்து பேசப்படுகின்றது.  அரசாங்க செயற்பாடுகளை வெளிப்படையானதாகவும்  பொறுப்புக்கூறும் தன்மை மிக்கதாகவும்  மாற்றுவதற்கு உதவக்கூடிய தேசிய இலத்திரனியல் அரசாங்க அமைப்பை கொள்வனவு செய்வதற்கு அரச தனியார் ஒத்துழைப்பை பயன்படுத்தலாம். அது ஆட்சி முறையை மேலும் பலப்படுத்தும்.  

யுஎஸ்எய்ட் மற்றும்  நிதியமைச்சின் பொதுநிதிப்பிரிவு ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும்  இந்த தேசிய மாநாடு அரச தனியார் ஒத்துழைப்பினை சர்வதேவ  தரத்திற்கு ஏற்ப உருவாக்குவதற்கான தந்திரோபாயங்கள் தொழில்நுட்பங்கள்குறித்து ஆராய்வதற்கான வாய்ப்பை அரசாங்க அதிகாரிகளிற்கு வழங்குகின்றது.  இதனுடன் வெளிப்படைதன்மை,பொதுநிதி முகாமைத்துவம்,பொதுமக்கள் பங்களிப்பு  தகவல் பெறுதல் ஆகிய தொடர்புபட்டுள்ளன  என்றார்.