(நா.தனுஜா)

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ள கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகள், கடந்த காலங்களில் முஸ்லிம்களை இலக்குவைத்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகப் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ந்து குரலெழுப்பியமைக்காகத் தமது நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.

No description available.

புலம்பெயர் இலங்கை முஸ்லிம் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக்ககூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் கனடாவில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை கனடாவிலுள்ள அமானா நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட புலம்பெயர் இலங்கை முஸ்லிம் பேரவையின் பிரதிநிதிகள், 'இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ்க்கட்சியின் பிரதிநிதிகள் கனடாவில் வாழும் இலங்கை முஸ்லிம்களைச் சந்தித்துக் கலந்துரையாடுகின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அண்மைக்காலங்களில் முஸ்லிம்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட்டுவருகின்றது என்பதை அனைவரும் நன்கறிவர். பெரும்பான்மையின சிங்களவர்களின் மனங்களில் முஸ்லிம்கள் பற்றிய அச்சத்தையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தி, இனவாதத்தைத்தூண்டி, அதன்மூலம் நடைமுறையிலுள்ள பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளை மறக்கடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது' என்று தெரிவித்தனர்.

No description available.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களையும் கட்டாயமாகத் தகனம் செய்யும் தீர்மானத்திற்கு எதிராக சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சர்வதேச ரீதியிலும் கருத்துக்களை வெளியிட்டமையை நினைவுறுத்திய அவர்கள், சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட நலன்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தொடர்ந்தும் அமைதிகாத்தபோது, அவ்விடயத்தில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக முன்னின்று போராடிய சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் நன்றிகூறவிரும்புவதாகவும் தெரிவித்தனர். அதுமாத்திரமன்றி அவர்கள் இருவரையும் போன்ற தலைவர்களையே தாம் விரும்புவதாகவும் அவர்களைப்போன்ற தலைவர்கள் முஸ்லிம் சமூகத்திலும் உருவாகவேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை அங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், 'நான் இலங்கையிலுள்ள அனைத்து இனமக்களின் பிரச்சினைகளுக்காகவும் குரல்கொடுக்கின்றேன்.

இருப்பினும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுக்கின்றபோது முஸ்லிம் சகோதரர்களிடமிருந்து வருகின்ற அதற்கான வரவேற்பு அதிகமாக இருக்கின்றது. 'நீங்கள்தான் அடுத்த அஷ்ரப்' என்று சிலர் கூறுவார்கள். ஆனால் உண்மையில் நாங்கள் வாக்குகளை எதிர்பார்த்து மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுக்கவில்லை. மாறாக முஸ்லிம் சமூகம் அவர்களுக்கு சேவையாற்றக்கூடிய சிறந்த தலைவர்களைத் தெரிவு செய்யவேண்டும் என்பதே எமது விருப்பமாக இருக்கின்றது' என்று தெரிவித்தார்.

No description available.

அதுமாத்திரமன்றி கடந்த தேர்தலில் தனித்துப்போட்டியிட்டவர்களையும் தேசியபட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டவர்களையும் தவிர பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படாத நிலையிலும், கடந்த வாரம் வரவு, செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தமை தொடர்பில் சுட்டிக்காட்டிய சாணக்கியன், இன்றளவிலே முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக மாறியிருப்பதாகவும் எனவே அவர்கள் தமது சமூகத்திற்கு சேவையாற்றக்கூடிய சிறந்த அரசியல் தலைமைத்துவத்தைத் தெரிவுசெய்யவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சுமார் 300 முஸ்லிம்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், வரவு, செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறையிலுள்ள முஸ்லிம் சகோதரர்களின் விடுதலைக்காகக் குரல் எழுப்பாதது ஏன்? என்றும் கேள்வியெழுப்பினார்.

அத்தோடு கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் பிளவடைந்திருந்தால், இன்னும் சில வருடங்களில் அம்மாகாணத்தில் சிங்களவர்களே பெரும்பான்மையைக் கொண்டிருப்பார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.