(ஆர்.யசி.,எம்.ஆர்.எம்.வசீம்)

 

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் தினத்தை அடிப்படையாகக்கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து என்ற வாசகம் பொறித்த ஸ்டிகர் ஒட்டியவண்ணம் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நேற்று சபைக்கு வருகை தந்திருந்தனர்.

பாராளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை ஆளும் தரப்பு உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி வரவு செலவு திட்ட உரையின்போது பெண்களை அகெளரவப்படுத்தி பேசியிருந்தார்.

அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டதுடன் பாராளுமன்ற பெண்கள் அமைப்பும் சபாநாயகரை சந்தித்து முறைப்பாடு செய்திருந்தது. அதன் பிரகாரம் சபாநாயகர் அதுதொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்து நேற்று முன்தினம் அறிப்பு செய்தார்.

இருந்தபோதும் பெண்களை அபகீர்திக்குள்ளாக்கும் வகையில் உரையாற்றிய குறித்த உறுப்பினர் அதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபையில் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டபோதும் சபாநாயகரும் அதுதொடர்பில் எந்த அறிவிப்பும் செய்யாததால், இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் சர்வதேச தினத்தை நினைவுபடுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து என்ற வாசகம் பொறித்த ஸ்டிகரை மேலாடையில் பொறித்தும் கையில் செம்மஞ்சள் நிர பட்டி கட்டிக்கொண்டும் சபைக்குள் வந்திருந்தனர்.

இதன்போது எதிர்க்கட்சி பிரதமகொரடா லக்ஷ்மன் கிரியெல்ல ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையில், பெண்களை அகெளரவப்படுத்தி இந்த சபையில் உரையாற்றிய உறுப்பினரின் கூற்று சாதாரணமானதல்ல. நீங்கள் அதனை கண்டித்திருந்தீர்கள். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். 

ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது அதுவல்ல. அதனையும்விட கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும். இந்த பாராளுமன்றத்தில் 32வருடங்களாக இருக்கின்றேன். இவ்வாறான மோசமான வார்த்தையை நாங்கள் கேட்டதில்லை. அதனால்  சம்பந்தப்பட்ட உறுப்பினர் இதற்காக மன்னிப்புகோரவேண்டும்.  அதற்கு அவர் மறுத்துவிட்டால் அவருக்கு எதிராக தண்டனை ஒன்றை பெற்றுக்கொடுக்கவேண்டும்.

அத்துடன் இன்று (நேற்று)  பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் சர்வதேச தினமாகும். அவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு எதிராக வார்த்தை மூலம் வன்முறை இடம்பெற்றிருப்பது மிகவும் வெட்கப்படவேண்டிய செயல். 

ஐக்கிய நாடுகள் சபை மார்ச் மாதம் விடுத்திருக்கும் எமக்கு எதிரான பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டில் ஒன்றுதான், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக அரசாங்கம் பதில் வழங்குவதில்லை என்பதாகும். அதனால் இதனை சாதாரணமாக எடுக்கவேண்டாம்.

 நீங்கள் இதுதொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இதனை சர்வதேசத்துக்கு கொண்டுசெல்லவேண்டிவரும் என்றார்.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், இந்த விடயம் தொடர்பாக நான் தீர்ப்பொன்றை அறிவித்திருக்கின்றேன். கடந்த காலங்களிலும் இதனைவிட மோசமான வார்த்தை பிரயோகங்கள் இந்த சபையில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. 

அப்போதும் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து, அந்த விடயத்தை நிறைவுசெய்தார்.