அனுஷா

எம்மில் நாற்பது வயதைக் கடந்தவர்களில் உடற்பருமன் மற்றும் உயர் குருதி அழுத்த பாதிப்புடன் இருப்பவர்களில் சிலருக்கும் பிறருக்கும் பச்சிளம் குழந்தைகளின் சிலருக்கும் எம்ட்டி செல்லா சிண்ட்ரோம் எனப்படும் வெற்று செல்லா நோய்க்குறி என்ற பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் நாட்பட்ட தலைவலி பாதிப்பு, சோர்வு, உயர் குருதி அழுத்த பாதிப்பு, பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபாடின்மை, மாதவிடாய் சுழற்சியில் சமச்சீரற்ற தன்மை, மகப்பேறின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Empty Sella Syndrome என்பது மூளையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் பிட்யூட்டரி என்ற சுரப்பி யின் செயல்பாடு மற்றும் அமைப்பில் ஏற்படும் பாதிப்பு என குறிப்பிடலாம். 

ஒவ்வொருவருடைய வளர்ச்சி மற்றும் உடலியக்கத்திற்கு தேவையான எட்டு ஹோர்மோன்களை உற்பத்தி செய்வதிலும், அதனை கட்டுப்படுத்துவதிலும் பிரதான பங்களிப்பை மேற்கொண்டு வருவது தான் பிட்யூட்டரி சுரப்பி. இந்த சுரப்பியில் மூளையிலிருந்து தண்டுவட பகுதிக்கு பயணிக்கும் ஒருவகையான திரவம் பல்வேறு காரணங்களால் கசிந்து இந்த சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுத்தினால், பிட்டியூட்டரி சுரப்பி தன்னுடைய வழமையான பணியை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர் கொள்ளும்.

Primary Empty Sella Syndrome மற்றும் Secondary Empty Sella Syndrome என இரண்டு வகைகளில் இதன் பாதிப்பு ஏற்படுகிறது. உடற் பருமன் காரணமாகவும், உயர் குருதி அழுத்தம் காரணமாகவும் ஆண்களைவிட பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிகளவில் ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

தலைவலி, உயர் குருதி அழுத்தம், சோர்வு , பாலியல் நடவடிக்கைகளில் ஆர்வமின்மை, சமச்சீரற்ற மாதவிடாய் சுழற்சி, மகப்பேறின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் இதுதொடர்பான பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

இத்தகைய பாதிப்பினை எம் ஆர் ஐ ஸ்கேன் மற்றும் பிடி ஸ்கேன் மூலமாகவே உறுதிபடுத்த இயலும்.

இத்தகைய பாதிப்பு அதிகமாகிவிட்டால் உங்களுடைய கண்களில் வீக்கம் ஏற்பட்டு பார்வையில் வேறுபாடு உண்டாகக்கூடும். 

சிலருக்கு பிட்யூட்டரி சுரப்பியை ஆக்கிரமித்திருக்கும் ஸ்பைனல் ஃப்ளூயீட் எனப்படும் தண்டுவடத் திரவம் அங்கிருந்து கசிந்து உங்களுடைய நாசித்துவாரத்தின் வழியாக வெளியே வரக்கூடும். 

இவை ஆபத்தான நிலை என கருதி, உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொண்டு இதனை குணப்படுத்திக் கொள்ளலாம்.

டொக்டர் கோட்டீஸ்வரன்