(எம்.எப்.எம்.பஸீர்)

திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்த படகுப் பாதை விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட  மூன்று பேரையும்  எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.  

படகுப் பாதையின் உரிமையாளர், செலுத்துநர் மற்றும் கட்டண பணம் வசூலிப்பவர் ஆகிய மூவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.   

கவனயீனமாக செயற்பட்டு 6 பேருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை மேலும் 20 பேருக்கு காயமேற்படுத்தியமை தொடர்பில்  அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே குறித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று மலை நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்ட அந்த மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில்  நேற்று முன் தினம் (23) படகுப் பாதை கவிழ்ந்ததில், மூன்று வயதுக்கும் 8 வயதுக்கும் இடைப்பட்ட 4 சிறுவர்களும், 32 வயது பெண் ஒருவரும் 70 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்திருந்தனர்.

மேலும் 20 பேர் காயமடைந்திருந்த நிலையில் அவர்களில் 18 பேர் கிண்ணியா தள வைத்தியசாலையிலும், ஒருவர் திருமலை வைத்தியசாலையிலும் மற்றொருவர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று  வந்தனர்.

அவர்களில் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று (24) வீடு திரும்பியதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி  வைத்தியர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 35,40 மற்றும் 53 வயதுகளை உடைய மூன்று சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.