(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராக பாராளுமன்ற சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அரசாங்கத்திடம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

களனி - கல்யாணி பொன் நுழைவாயிலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசாங்கம் நியமித்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.  

அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, தொடர் நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிடமும் கையளிக்கப்பட்டுள்ளன. 

பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்.

அதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அரசாங்கத்துக்கு உள்ளது. அதனால் கோரிக்கைகளை முன்வைக்கும் போது கவனமாக இருக்குமாறும் மக்களை ஏமாற்ற வேண்டாமென்றும் எதிர்க்கட்சியினருக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

2005 - 2010 மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நாட்டின் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளுக்குமான நிலையான தீர்வு பெற்றுத் தரப்படும். 

கொவிட் தொற்றுப் பரவல் காலத்திலும் கூட, உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவையனைத்தையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். 

எதிர்காலத்தில் நாட்டை மூடவேண்டிய நிலைமை ஏற்படாதிருப்பின், உறுதியளிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் நிறைவு செய்ய முடியும் என்றார்.