( எஸ்.என்.நிபோஜன்)

இலங்கையில் நீடித்த  சமாதானம் நிலைபெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு இதனை அரசாங்கம் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த தவறினால், மக்கள் புரட்சி இந்த மண்ணில் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து  1987 ஆம் ஆண்டு உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்த  லெப் கேணல் திலீபனின் 29 ஆவது ஆண்டு நிகழ்வு  கடந்த ஏழுவருடங்களின் பின்பு கிளிநொச்சியில் நடைபெற்றது.

ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்பு  அகிம்சை வழியிலான போராளிகளை நினைவு கூருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது  அந்த வகையில் நேற்று கிளிநொச்சி அறிவகத்தில் மிக எழுச்சி பூர்வமாக நிகழ்வில்  கலந்துகொண்டு  பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சிறப்புரை ஆற்றினார் .

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

எங்களுடைய நீண்ட போராட்ட வரலாற்றிலே  எமது தலைமைகள் பலவிட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு அரசுடனான சமாதான முயற்சிகளில் பங்கு பற்றி இருக்கிறார்கள்.  அகிம்சை ரீதியிலான  எமது முயற்சிகள்  சவாலுக்கு உட்பட்டபோதே ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டது.

 ஆயுதத்தை எமது இனம் கையாண்ட முறைகளுக்குமேலாக ஜனநாயக ரீதியில்  எமது முயற்சிகள் இருந்தது.  எமது அறவழிப் போராட்டங்கள் மாத்திரம் அன்றி தியாகி திலீபன், அன்னை பூபதி போன்றோரின் இத்தகைய தியாகங்களும் நாங்கள் ஜனநாயகம் மீது கொண்டிருந்த விருப்பத்தின் வெளிப்பாடுகளே.

இன்றும் சர்வதேச சமூகத்தின் பார்வையில்  எமது தலைமை முடிந்தளவு விட்டுக்கொடுப்புக்களுடன் தீர்வுநோக்கி பயணிக்கின்றது.  இதனை அரசுபுரிந்து கொள்ளவேண்டும். நியாயமான தீர்வை  பொருத்தமான இக்கால கட்டத்தில் முன்வைக்கவேண்டும். அதன் ஊடாக இலங்கையில் நீடித்த  சமாதானம் நிலைபெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த தவறினால் தியாகி திலீபன் அவர்களது கனவாகிய மக்கள் புரட்சி இந்த மண்ணில் வெடிக்கும். ஆகவே நடைமுறை சூழலை தகுந்த முறையில்  பயன்படுத்த அரசுமுன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.