ஒளி பொங்கும் தீபாவளி இவ்வாண்டு நாட்டியக் கலா மந்திருக்கு அயோத்தியாவில் இடம்பெற்ற தீப உற்சவத்தைக் காண வழியாக அமைந்தது, இந்த அனுபவத்தை நாட்டியக் கலா மந்திரின் ஸ்தாபக இயக்குனர் திருமதி வாசுகி ஜெகதீஸ்வரன் ஆகிய நான் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

ஆம் இந்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசினாலும் கலாச்சார திணைக்களத்தினாலும் ஒழுங்கமைக்கப்பட்ட தீப உற்சவம் 2021ல் பங்கு கொள்ளும் மாபெரும் வாய்ப்பு இவ்வாண்டு எமக்குக் கிடைக்கப்பெற்றது. இந்த மாபெரும் வாய்ப்பினை எமக்கு அளித்த உத்தரப் பிரதேச அரசிற்கும் கலாச்சாரத் திணைக்களத்தினுடைய அயோத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

கலைஞர்களாய், எமது கலையை அயோத்தி மண்ணில் அரங்கேற்ற இறைவன் வழியமைத்துக் கொடுத்திருக்கிறார். அதுவும் நாட்டியக் கலா மந்திர் அதனது 45வது அகவையைக் கண்ட இவ்வாண்டு எமக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றிருக்கின்றது என்று நினைக்கும் போது சந்தோசம் இரட்டிப்படைகின்றது.

சரியாக நிகழ்வு தினத்திலிருந்து மூன்று கிழமைகளுக்கு முன்னதாகவே எமது கைவசம் இந்த வாய்ப்பளிக்கப்பட்டது.  அந்த மூன்று கிழமைகள் எனது  வழிகாட்டலின் கீழ் மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டார்கள். பயிற்சிக் காலமானது தீப உற்சவத்திற்கான தயாரிப்பாக மட்டுமன்றி தனிப்பட்ட முறையில் மாணவர்கள் ஒவ்வொருவரது கலை வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைய வேண்டும் என்பது தான் அவர்களது குருவாக நான் எண்ணிய விடயம்.

இராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் தொடங்கி யுத்த காண்டம் வரையிலான முக்கிய உள்ளடக்கங்களை கொண்டதாக அமைந்தது நாட்டியக் கலா மந்திரின் “ஶ்ரீ இராம ராஜ்யாபிஷேகம்”. இந்த படைப்பினை முற்று முழுதாக கருத்தாக்கம் செய்து உதவியவர் செஞ்சொற்செல்வர் ஶ்ரீ எஸ் விஸ்வநாதன் அவர்கள். இதற்கான இசைத்தொகுப்பைத் தயாரித்து வழங்கியவர் திரு நந்திக அசங்க வெலிகொடபொல அவர்கள். 

ஆர்வம், தேடல், எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி என பல விதமான உணர்வுகளோடு இராமபிரானுடைய ஜென்ம பூமியைக் காண அனைவரும் 29ஆம் திகதி ஐப்பசி மாதம் காலை இலங்கையிலிருந்து புறப்பட்டோம்.

எனது தலைமையில் பிரபல நடனக் கலைஞர் திரு. டி. கே. திருச்செல்வம் உட்பட நாட்டிய கலா மந்திரின் சிரேஷ்ட மாணவிகளான அனுஜா ஐங்கரன், மிருணாளினி சோமசுந்தரஐயர், அர்த்தனா ஜம்புநாதன், சுலக்ஷிதா திருஞானம், விதுஷாலி கணேஷ், சரண்யா சுதாகரன், தக்ஷனா குமாரரட்ணம், அபிராமி தனபாலசுந்தரம், மற்றும் சுவஸ்திகா சுவீந்திரன் ஆகியோரை உள்ளடக்கிய பதினொரு கலைஞர்களைக் கொண்ட நடனக்குழுவாக எமது பயணத்தை ஆரம்பித்தோம்.

இறைவன் அமைத்த வழி என்பதையும் தாண்டி எமது கலையின் பெருமையை பறைசாற்ற ஓர் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது என்பதே எமது மனங்களில் முதல் தோன்றிய எண்ணமாக அமைந்தது.

29, 30, 31ஆம் திகதிகளில் எமக்கு லக்னோ, அதாவது நவாப்புகளின் நகரம் எனும் லக்னோவில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நகரத்தின் தனித்துவம், பெருமை என்பன நாம் அனைவரும் அறிந்ததே. வட இந்தியா, வட இந்திய கலாச்சாரம், வட இந்திய மக்கள் என பல புதிய அனுபவங்களை எங்களால் முடிந்தவரை, சிறிதளவாக இருந்தாலும் அறிந்து கொண்டோம். தேரோட முன் வெள்ளோட்டம் ஓட்டிப்பார்ப்பது போல் எமது முதல்கட்ட ஒத்திகைகளை அனுபவம்மிக்க இந்திய கலைஞர், கலாக்ஷேத்ரா பட்டதாரி திரு. திருச்செல்வம் அவர்களுடன் லக்னோவில் செய்து பார்த்தோம். 

முதலாம் திகதி காலை மலர்ந்தது. அதனுடன், அயோத்தியைக் காணும் ஆசையும் மலர்ந்தது. ஆம், இறுதியாக அயோத்தி செல்லும் அந்த நாள், அந்த தருணம் எம் அனைவரது வாழ்வையும் வந்தடைந்தது.

இராமர் பிறந்த இடத்தில் அதுவும் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து இராமபிரான் அயோத்தி திரும்பிய அந்த புனிதமான தீபாவளி தினத்தில் மக்கள் இன்றும் ஆரவாரத்தோடு கொண்டாடும் புண்ணிய பூமியில் எமது கலையை அரங்கேற்ற கிடைத்த வாய்ப்பென்பது அரும்பெரியதொன்று.

ஏறக்குறைய மூன்றரை மணித்தியால பேருந்து பயணத்தின் பின் அயோத்தியை அடையக் கூடியதாய் இருந்தது. "ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்" என்று மக்கள் மொழிந்த நாமமே அயோத்தி வந்தடைந்துவிட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

அயோத்தியை அடைந்த முதல் நாளே இராமர் கோயிலின் கட்டுமான செயற்திட்டத்தின் செயலாளர் மதிப்பிற்குரிய சம்பத் ராய் அவர்களைக் கண்டு கலந்துரையாடும் சந்தர்ப்பமும் கிடைத்தது. அங்கேயே இராமர் கோயிலின் முதல் மாதிரி அமைப்பினைக் காணக்கூடியதாகவும் அதன் விளக்கத்தினைக் ஹஜாரிபாய் எனும் பணியாளரூடாக தெரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது. 

இரண்டாம் நாள், பிரதான அரங்கமான ராம் கதா பாக் இல் எமது ஒத்திகைகளைப் பார்க்கக் கூடியதாய் இருந்தது. பிரமாண்டமான ஓர் அமைப்பு. அந்த மேடையில் எமது நாட்டிய நாடகத்தை அரங்கேற்றும் அந்த தருணம் தான் மீண்டும் மீண்டும் கண்முன் வந்துபோய்க்கொண்டிருந்தது.

மூன்றாம் திகதி காலை மகத்துவம்மிக்க யாத்திரைத் தலமான ராம்லாலா சென்று இராமபிரானைத் தரிசித்தோம். புனிதமான ஓர் வழிப்பாட்டுத்தலம். வாழ்க்கையில் ஒரு புதிய அனுபவமாகவும் எமக்கு அமைந்தது இராமர் கோவில் தரிசனம். 

அதற்கருகாமையிலேயே கோவிலிற்கான கட்டிடப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பான்சி பஹன்பூர் ராஜஸ்தானிலிருந்து எடுத்துவரப்பட்ட செந்நிறக் கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட இராம் மந்திருடைய தூண்களையும் அங்கே காணக்கூடியதாயிருந்தது.

இறுதியாக நாம் அனைவரும் எதிர்பார்த்த அந்த தருணம், ஆம், கண்ணைக் கவரும் லேசர் ஒளிக் காட்சிகள், 500 3D ட்ரொன்கள், சரயு நதிக் கரையில் பன்னிரண்டு லட்ச தீப விளக்குகள், வானவேடிக்கைகள் இவை அனைத்துக்கும் மத்தியில் உத்தர பிரதேச முதலமைச்சர் மதிப்பிற்குரிய யோகி ஆதித்யநாத் முன்னிலையில் எமது நிகழ்ச்சி, என்று சொல்லும் போதே மெய்சிலிர்க்கிறது. கைத்தட்டல்கள், ஆரவாரங்கள், இராம நாமங்கள் என பங்குபற்றிய அனைவரையும் பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்படுத்திவிட்டார்கள். 

எமது நிகழ்ச்சியைக் கண்டு முதலமைச்சர் அவர்கள் தானாகவே முன்வந்து  எமக்குரிய பாராட்டு சின்னங்களை வழங்கி கௌரவித்தார் என்பதை நாம் பெருமைக்குரிய ஒரு விடயமாகவே கருதுகின்றோம்.

அயோத்தியின் 5வது தீப உற்சவத்தில் பங்கு கொள்ளும் அந்த தருணம் எமது வாழ்க்கையில் கிடைத்தது ஒரு பாக்கியம். சரயு நதியில் அன்று ஒளிர்ந்த பன்னிரண்டு லட்சம் விளக்குகளும் கின்னஸ் சாதனை படைத்துவிட்டன. இராமபிரான் தனது அவதார முடிவினைக் கண்ட சரயு நதியின் குப்தர் காட் கரை மண்ணையும் எடுத்து எமது வழிப்பாட்டிற்காக கொண்டுவரும் பாக்கியமும் கிடைத்தது. 

ஆக, ஒவ்வொரு தருணமும் எமது வாழ்நாளில் மறக்க முடியாத புனிதமான, பூரிக்க வைத்த நினைவுகளாக இந்தப் பயணம் நாட்டியாக் கலா மந்திருக்கு அமைந்ததை நினைத்து பெரு மகிழ்ச்சியடைகிறோம்.

கலாசூரி, ஆச்சார்ய கலா சாகர வாசுகி ஜெகதீஸ்வரன்

ஸ்தாபக இயக்குனர் -நாட்டிய கலா மந்திர்

நடன ஆசிரியர் - சுவாமி விவேகானந்த கலாச்சார நிலையம்