தமிழ் திரைப்பட விமர்சகரான மாறன் எனும் ப்ளூ சட்டை மாறன் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகமாகும் 'ஆன்டி இந்தியன்' படத்தின் ஓடியோ வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இதில் தமிழ் திரை உலகின் மூத்த நடிகரான டத்தோ ராதாரவி சிறப்பு அதிதியாக பங்குபற்றி ஓடியோவை வெளியிட்டார்.

இசை வெளியீட்டின் தொடக்க நிகழ்வாக இந்த படத்தில் நடித்த சென்னையை சார்ந்த கானா இசைக் கலைஞரான சதீஷ் மற்றும் அவரது குழுவினர் பங்குபற்றிய கானா பாடல் மற்றும் மரண குத்து நடனம் அரங்கேறியது.

பின்னர் இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன், 

“இந்த திரைப்படத்தில் சென்னையிலிருக்கும் திறமையான கானா பாடல் பாட்டு பாடும் இளைஞர்களை நடிக்க வைத்திருக்கிறேன். 'சார்பட்டா பரம்பரை' படத்திற்கு பிறகு இந்த படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்களுக்குக்கூட இரசிகர்களிடமஜருந்து பெரிய அங்கீகாரம் கிடைக்கும். 

இந்தப்படத்தில் நிஜ வாழ்க்கையில் ரவுடியாக இருக்கும் ஒருவரையும், விஜய் ரிவி புகழ் நடிகர் பாலாவையும், டத்தோ ராதாரவி அவர்களையும் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். 

டிசம்பர் 3 ஆம் திகதியன்று படம் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

பிக்பொஸ் பிரபலமும் நடிகருமான சுரேஷ் சக்கரவர்த்தி பேசுகையில்,'

'இந்தப் படத்தை பார்வையிட்ட பிறகு இயக்குநர் மாறன் அணிந்த அதேபோல் ப்ளூ சட்டையை அணிந்து அவருடைய யூடியூப் சேனலில் நான் இந்த படத்தின் விமர்சனத்தை பேச இருக்கிறேன். இதற்கு இயக்குநர் மாறன் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

தமிழ் திரை உலகில் வெளியான நூற்றுக்கணக்கான படங்களை தன்னுடைய கூர்மையான விமர்சனத்தால் குத்திக் கிழித்த விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கியிருக்கும் திரைப்படம் என்பதால் , 'ஆன்டி இந்தியன்' படத்திற்கு திரையுலகினர் மற்றும் இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.