மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து நேற்று மாலை கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றவர் காணாமல்போயுள்ள நிலையில் அவர் சென்ற இயந்திரப்படகு மாத்திரம் கிரான்குளம் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீனவர்களினால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியிருந்து மீன்பிடிக்க திராய்மடு,சுவிஸ்கிராமம் பகுதியை சேர்ந்த எஸ்.சுரேஸ்குமார் என்ற மீனவர் இயந்திரப்படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

நேற்று மாலை நேரத்திற்கு பின்னர் கடலில் சீற்றம் காணப்பட்ட நிலையில் குறித்த நபர் காணாமல்போயிருந்தார். இந்த நிலையில் இன்று காலை குறித்த நபர் மீன்பிடிக்கச்சென்ற படகு கிரான்குளம் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் அவை மீட்கப்பட்டு முகத்துவாரம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

எனினும் அதில் மீன்பிடிக்காக சென்றவர் காணாமல்போயுள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் பயணித்த படகினுள் அவர் பிடித்த மீன்கள் இருந்த நிலையில் ஒரு தொகுதி வலை மாத்திரமே உள்ளதாகவும் மீதி வலை கடலுக்குள் சென்றுவிட்டதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் குறித்த நபரின் குடும்பம் மிகவும் வறுமையானது எனவும் குறித்த நபர் மீன்பிடித்துவந்தால் தான் வீட்டில் உணவு சமைக்கப்படும் நிலையுள்ளதாகவும் காணாமல் போனவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் காணாமல்போன மீனவரை தேடும் பணிகளில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.