(இராஜதுரை ஹஷான்)

2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு  ஆதரவு வழங்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,பைசல் காசிம்,ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகியோர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் ரஹ்மான்,அலி சப்ரி மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகியோரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தி,ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்க கூடாது என கட்சி உயர் பீடத்தின் தீர்மானத்தி;ற்கு எதிராக  செயற்பட்டு பாதீட்டுக்கு ஆதரவு  வழங்கியமையினால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்களித்த  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த 22 ஆம் திகதி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும், இறுதி வாக்கெடுப்பிலும்  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்,இஷ்ஹாக் ரஹ்மான்,அலி சப்ரி மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் எதிராக வாக்களிக்க வேண்டும் என  கடந்த 21ஆம திகதி இடம்பெற்ற கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானி;க்கப்பட்டது.

கட்சியின் அரசியல் அதிகார சபையின் தீர்மானம் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

கட்சி யாப்பு அரசியல் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய  கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் ரஹ்மான்,அலி சப்ரி மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகியோர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன்,அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.