கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று இடம்பெற்ற கடல் வழிப்பாதைப் பயணத்தில் ஆறு உயிர்களைக் காவு கொண்டதன் எதிரொலியாக இன்று (24.11.2021) காலை 7.00  மணிக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை மறித்து எதிர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இதனால் குறிஞ்சாக்கேணி பிராதான வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டது. பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக தற்காலிகமாக குறித்த பஸ் சேவை போடப்பட்டது.

குறித்த பஸ் சேவை காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, கச்சக்கொடித்தீவு ஊடாக கிண்ணியாவை சென்றடைவதற்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் “இந்த பஸ் சேவையை ஆறு உயிர்களை பறிகொடுத்ததன் பின்னரா போட வேண்டும், இதற்கு முன்னரே சேவையில் ஈடுபடுத்தியிருக்கலாமே” எனக் கூறி எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

மேலும் பஸ் பயணம் செய்ய முடியாமலிருக்க, பஸ்ஸிக்கு முன்னர் கற்களை இட்டு தடைப்படுத்தி இருந்தனர்.

இதனால் காக்காமுனையிலிருந்து பாடசாலை செல்வதற்காக சுமார் 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறிஞ்சாக்கேணியில் இறக்கப்பட்டனர்.

இவ்வாறு இறக்கப்பட்ட மாணவர்களில் ஒரு சிலர் வீடு திரும்பினர். சில மாணவர்கள் வேறு மார்க்கத்தினூடாக பாடசாலைக்குச் சென்றனர்.

சம்பவ இடத்திற்கு கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் கிண்ணியா இராணுவ முகாம் பொறுப்பதிகாரிகள் வருகை தந்தனர்.

எதிர்ப்பாளர்களிடம் பேசிக் கலந்துரையாடி, எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து எதிர்ப்பு கைவிடப்பட்டது.