குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்துக்கு இம்ரான் எம்.பி.யின் மைத்துனரே பிரதான காரணம் - நிமல் லான்ஸா 

Published By: Digital Desk 3

24 Nov, 2021 | 08:10 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்துக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டியது எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹரூபின் மைத்துனரான கிண்ணியா நகரசபை தலைவரும், படகுப்பாதை சேவையை நடத்தியது அவரது உறவினரான நெருக்கமான ரியாஸ் என்ற நபருமேயாவார்.

ஆகவே ஜனாதிபதி, பிரதமர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனை கருத்தில் கொண்டு நகரசபை தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமிய வீதிகள் , ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24 ), அமைச்சரவை அறிவிப்பை முன்வைத்த கிராமிய வீதிகள் , ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா,  கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற  அசம்பாவிதம் குறித்து எமது அனுதாபங்களை வெளிப்படுத்தினார். 

இதன்போது அவர் கூறுகையில், 

சகல ஊடகங்களிலும் இந்த செய்து பிரதான செய்தியாக மாறியுள்ளது. கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை கவிழ்ந்ததில் உயிரிழந்த சிறுவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கும் எனதும் அரசாங்கத்தினதும் ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றேன். அதேபோல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகலரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் மக்கள் நீண்டகாலமாக களப்பை பயன்படுத்திய காரணத்தினால் பாலமொன்று இல்லாத நிலைமையே காணப்பட்டது. பாதுகாப்பில்லாத முறையில் இவர்கள் படகுகளை பயன்படுத்திக்கொண்டனர். அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக இருந்ததும் தமக்கு பாலம் ஒன்று வேண்டும் என்பதேயாகும். 

நல்லாட்சி காலத்திலும் பல அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினாலும் குறித்த பாலத்தை நிர்மாணிக்க முடியாது போயிருந்தது. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய தௌஹித் எம்.பியும் குறித்த பாலத்தை புனரமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்திருந்தார்.

குறித்த பகுதியில்  மூன்று பாலங்கள் நிர்மாணிக்க வேண்டியுள்ளது, அதில் ஒரு பாலத்தை புனரமைக்க அடிக்கல் நாட்டினேன். இந்த பாலத்தை முழுமைப்படுத்தும் வரையிலும் மாற்று வீதியை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. 

வீதி அபிவிருத்தி அதிகார சபையில் மாற்று வீதியை பயன்படுத்தவே அனுமதி வழங்கியிருந்தது. மாற்றுப்பாதையை மக்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த படகுப்பாதையை பாவிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேசசபையே இதற்கான அனுமதியை கோரியிருந்தது. 

ஆனால் அவ்வாறு படகுப்பாதை பயன்படுத்த வேண்டாம் என தெளிவாக கூறியிருந்தோம். அதன் பின்னர் கிண்ணியா நகரசபையும் இதே கோரிக்கையை முன்வைத்தது. அதற்கும் நாம் அனுமதி வழங்கவில்லை, மாற்றுப்பாதையே பயன்படுத்த வேண்டும் என தெளிவாக கூறியிருந்தோம்.

இவ்வாறான நிலையில்தான் கிண்ணியா நகரசபை தமக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்க வியாபாரி ஒருவருக்கு இந்த படகுப்பாதையை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

படகுப்பாதை பயன்படுத்தப்படும் வேளையில் கையாள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே குறித்த தரப்பினர் பின்பற்றவில்லை.

குறைந்தபட்சம் உயிர்காப்பு கவசம் கூட பயன்படுத்தப்படவில்லை. இதன் காரணமாகவே இவ்வாறான துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு கிண்ணியா மக்கள் முகங்கொடுக்க நேர்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் முதலில் பொறுப்பு கூற வேண்டியது கிண்ணியா நகரசபையே. நாம் சகலரும் நிராகரித்த ஒரு விடயத்தை கிண்ணியா நகரசபை தலைவர் கவனத்தில் கொள்ளாது எடுத்த தீர்மானமே இந்த அசம்பாவிதத்திற்கு காரணமாகும். 

ஆகவே கிண்ணியா நகரசபை தலைவர் இதற்கு பொறுப்பு கூறியாக வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் இல்லாத ஒரு வேலையை செய்து இந்த நிலைமையை உருவாக்கியுள்ளனர். இம்ரான் மஹரூப் நேற்று சபையில் இது குறித்து கேள்வி எழுப்பினார், அவரது மைத்துனரே கிண்ணியா நகரசபை தலைவர். 

இந்த படகுப்பாதை சேவைக்கு அனுமதி வழங்கியதும் அவரது மைத்துனரே. இந்த படகுப்பாதை சேவையை நடத்தியது அவரது உறவினரான நெருக்கமான ரியாஸ் என்ற நபர். இந்த செயற்பாட்டிற்கும் தொஹித் எம்.பிக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

ஆனால் இம்ரான் எம்.பி இந்த சபையை தவறாக வழிநடத்தி மக்களை ஏமாற்றியுள்ளார். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை கையில் எடுத்து அரசியல் செய்ய வேண்டாம்.

படகுப்பாதைக்கு அனுமதி கொடுத்தது யார், அதனை நடத்தியது யார்? இதனையே கருத்தில் கொள்ள வேண்டும். நடக்கக்கூடாத ஒரு சம்பவம், இதனை தனது வியாபார நோக்கத்திற்காக சட்ட அனுமதி இல்லாத ஒரு விடயத்தை சட்டவோரோதமாக பயன்படுத்தியுள்ளனர். 

ஜனாதிபதி, பிரதமர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனை கருத்தில் கொண்டு நகரசபை தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பதவியை பறிக்கவும், குற்றப்புலனாய்வு பிரிவை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன் என்றார்.

ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் ,

சட்டவிரோதமாக இதனை செய்திருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பாலம் நீண்ட காலமாக புனரமைக்காமல் கைவிடப்பட்டுள்ளது. 

அதேபோல் படகுப்பாதையை நீங்களேனும் நடத்தியிருக்க வேண்டும். அதனையும் நீங்கள் ஏன் முன்னெடுக்கவில்லை. உங்களின் கடமையை ஏன் நீங்கள் முறையாக முன்னெடுக்கவில்லை என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் லான்ஸா :- கிண்ணியா பிரதேசசபை கூட்டத்தில் இதற்கு அனுமதிக்க மாட்டோம் என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் கிண்ணியா பிரதேசசபை தலைவரும் கலந்துகொண்டிருந்தார். 

சகலரும் ஒன்றிணைந்தே இணக்கம் கண்டனர். அப்பக்கடையில் அப்பம் சுடுவது போன்று பாலத்தை புனரமைக்க முடியாது. அதற்கு காலம் அவசியம், அதற்காகவே மாற்று வீதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

தற்போது உயிரிழந்துள்ள முஸ்லிம் மக்களின் மரணங்களுக்கு இம்ரான் எம்.பியின் மைத்துனரே காரணம். அவரே படகுப்பாதை அமைக்க அனுமதி வழங்கியுள்ளார். இம்ரானும் இதற்கு காரணம், ஆகவே இவர்கள் அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும். அதேபோல் வெகு விரைவில் பாலத்தை புனரமைப்போம் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சமிந்த விஜயசிறி ,

 நகரசபை தலைவர் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என எமக்கும் தெரியும், ஆனால் அவர் அனுமதி கேட்கும் போது அதற்கு அனுமதி கொடுத்தது யார் என்பதையும் கேட்க வேண்டும். இனியும் இவ்வாறான அசம்பாவிதம் இடம்பெறாத விதத்தில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் பாலத்தை துரிதப்படுத்துங்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09