தமிழ் திரையுலகின் மூத்த நடிகைகளில் ஒருவரான நடிகை சோனியா அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'கிராண்மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனை தமிழ் திரை உலகின் முன்னணி பிரபலங்களான வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா உள்ளிட்ட 19 பேர் இணைந்து சமூக தளத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

ஜீஎம்ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ், ஆர். விநாயகா, சுனில் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'கிராண்மா'. 

இயக்குநர் ஷிஜின் லால் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். 

இவருடன் விமலா ராமன், சார்மிளா, மலையாள நடிகர் ஹேமந்த் மேனன், குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யஸ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சங்கர் சர்மா இசை அமைத்திருக்கிறார்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ''ஹொலிவுட் தரத்தில் அழுத்தமான பேய் பட பாணியில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதையை கேட்ட நடிகை சோனியா அகர்வால் பேயாக நடிக்க ஒப்புக்கொண்டார். 

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் அமையப் பெற்றிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனைத்து திரையுலக பிரபலங்களுக்கும் நன்றி'' என்றார்.

நடிகை சோனியா அகர்வால், 'கதாநாயகியாக தான் நடிப்பேன்' என தொடர்ந்து கூறி வருவதால் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிதானது. இந்நிலையில் அவர் பேய் கதை என்பதால் நம்பி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.