(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மிகவும் மோசமான சொற் பிரயோகங்களை பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டித்துள்ள நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் , இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் நாளொன்றுக்கு இலட்சக்கணக்கான ரூபாவைச் செலவழிக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அவ்வாறு செலவு செய்வது இந்த நாட்டு மக்களின் பணம் என்பதை உங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

அவ்வாறிருக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மிகவும் மோசமான சொற் பிரயோகங்களை பயன்படுத்துவதை நாம் வன்மையாகக் கண்டிருக்கின்றோம். 

இவ்வாறான கூற்றுக்களால் மக்களாகிய நாங்கள் மிகவும் வெட்கப்படுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் வருந்துகிறோம். 

மேலும் இதுபோன்ற அறிக்கைகள் குறித்து எங்களுடைய சிறு பிள்ளைகள் எங்களிடம் கேட்கும்போது பெற்றோர்களாகிய நாங்கள் சந்திக்கும் சிரமங்களை  பாராளுமன்றத்திற்கு தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.