(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றுமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை ஏற்று எதிர்வரும் 29 ஆம் திகதி அமெரிக்காவிற்கு புறப்படுகின்றேன்.

இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் எனது பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்கவுள்ளேன் என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் மட்டுமல்ல அரசியல் ரீதியிலும் உறவை பலப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை ஆதரவே நான் அங்கு பயணிக்கின்றேன் எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவீனத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

மனித உரிமைகள் பேரவை மிக முக்கியமான ஸ்தாபனமாகும். ஆனால் கடந்த காலத்தில் பேரவையில் நாம் படுதோல்வி அடைந்துள்ளோம். எனவே ஆணையாளர் கூறும் அனைத்தையும் உண்மையென தீர்மானிக்கவும் கூடாது. அவருக்கு கிடைக்கும் தகவல்கள் முற்று முழுதாக உண்மையும் அல்ல. 

அதேபோல் மனித உரிமைகள் பேரவை குறித்து பேசும்போது அங்கு அங்கம் வகிக்கும் 47 நாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, எமக்கு எதிராக பிரேரணை எதுவும் கொண்டுவரும் வேளையில் அனைவரும் எதிரானவர்கள் என நினைக்கவும் கூடாது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளுடன் நாம் பாரிய ஏற்றுமதி இணைப்பொன்றை வைத்துள்ளோம். எனவே இந்த நாடுகளை நாம் பகைத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் எமக்கு எதிராக பிரேரணை ஒன்றினை முன்வைக்கும் வேளையில் நாம் கதவை மூடக்கூடாது. 

அவர்களுக்கு இடம் வழங்கி நாம் இங்கு என்ன செய்கின்றோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கிற்கு செய்யும் பாரிய வேலைத்திட்டம் குறித்த உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் எனது தனிப்பட்ட அறிவிப்பொன்றை முன்வைக்கின்றேன், அமெரிக்காவிற்கான தூதுவராக என்னை கடமையாற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். அவரது கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் பாராளுமன்ற பதவியை துறந்து 29 ஆம் திகதியளவில் அமெரிக்காவை நோக்கி பயனிக்கவுள்ளேன்.

ஒரு மாதத்திற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அமெரிக்கா பாரிய வெற்றி பெற்று மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் அங்கத்தவ நாடாக மாறியுள்ளது. 

அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி உறுப்புரிமையை பெற்றுக்கொள்கின்றனர். மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பிரதிநிதியாக எனது பத்து ஆண்டுகால அனுபவத்தில் நான் ஒன்றை கூறுகின்றேன்.

 மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவே தலைமை தாங்குவார்கள். ஆகவே அமெரிக்காவுடன் எமது நட்புறவையும் தொடர்பையும் அதிகரிக்க வேண்டும், அதுவே அவசியமான காரணியாகும். 

பொருளாதார ரீதியில் மட்டுமல்ல அரசியல் ரீதியிலும் உறவை பலப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பிக்கவே நான் அங்கு பயணிக்கின்றேன்.

நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவில்லை, ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நாட்டுக்கு சேவையாற்றவே நான் அங்கு செல்கின்றேன், அங்கிருந்து மீண்டும் நாடு திரும்பியவுடன் எனது மக்களுக்காக மீண்டும் சேவையாற்ற நான் என்னை இணைத்துக்கொள்வேன் என்றார்.