இலங்கையை பல்லின சமூக ஜனநாயகமாக மறுசீரமைப்புச் செய்வது சாத்தியமானதா ?

Published By: MD.Lucias

26 Sep, 2016 | 03:09 PM
image

இலங்கை வெளியுறவு அமைச்சின் ஆலோசகராக இருக்கும் ஹரிம் பீரிஸ்  அண்மையில் ‘ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் ‘ஐக்கிய தேசியக்கட்சியினதும் மகாநாடுகளும் தேசிய அரசாங்கக் கோட்பாடும்’ (The SLFP and UNP Conventions and ideology  of National government)  என்ற தலைப்பில் எழுதிய  கட்டுரையொன்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றில் வெளியாகியிருந்தது. அதில் அவர் தற்போது முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில்  இயங்கும் ஜனாதிபதியின் தேசிய  ஐக்கியம் மற்றும்  நல்லிணக்க அலுவலகத்தின் (President’s office of National unity and Reconciliation)  உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் கலாநிதி ராம் மாணிக்கலிங்கம்  இலங்கையில் ஒன்றுடன்  ஒன்று  தொடர்புபட்ட மூன்று முரண் நிலைகள் பற்றி கடந்த காலத்தில் தெரிவித்த கருத்துக்களை நினைவுபடுத்தியிருந்தார்.

அரச ஆயுதப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான   இராணுவ முரண் நிலை, ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான அதிகார முரண் நிலை, சிங்கள  இனத்துவ தேசிய  வாதத்துக்கும் தமிழ் இனத்துவ  தேசிய வாதத்துக்கும் இடையிலான அரசியல் முரண் நிலை ஆகியவையே கலாநிதி மாணிக்கலிங்கம் அடையாளம் காட்டிய  முரண் நிலைகளாகும். 2009 மே மாதத்தில்  விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதையடுத்து மேற்கூறிய இராணுவ முரண் நிலை முடிவுக்கு  வந்ததாகவும் 2015 ஜனவரிக்குப் பிறகு  ஐக்கிய  தேசியக் கட்சியும் சுதந்திரக்கட்சியும் நிறைவேற்று அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் இணக்கப்போக்குடைய அணுகுமுறையைக்  கடைப்பிடிக்க  ஆரம்பித்ததையடுத்து அவ்விரு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான அதிகார முரண் நிலை முடிவுக்கு வந்ததாகவும் பாராளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளை முன்னெடுக்கக்கூடியதாக இருப்பதாகவும் ஹரிம் பீரிஸ்  குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரசு அதன் சமுதாயத்தில் உள்ள முழுமையான பல்வகைமைக்கு (Full Diversity) அல்லது பல்லினத் தன்மைக்கு இடங்கொடுக்கக்கூடிய அரச சீர்திருத்தங்களை செய்வதன் மூலமாக இனத்துவ தேசியவாதங்களுக்கிடையிலான  முரண் நிலையையும் முடிவுக்கு கொண்டுவரலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். காலஞ்சென்ற  அரசியலமைப்பு  நிபுணர் கலாநிதி நீலன் திருச்செல்வம் பல்லின  அரசியல் சமுதாயம் ஒன்றின் மீது ஓரினத்துவ அரசு திணிக்கப்படுகின்ற ஒழுங்கற்ற முறைமையைக் கொண்டதாக (Anomaly of imposing a mono ethric state  on a multi ethnic polity)  இலங்கை இருக்கிறது என்று முன்வைத்த விளக்கத்தையும் ஹரிம் பீரிஸ் தனது கட்டுரையின் இறுதியில் நினைவுப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. அவருடைய கருத்துக்களின் அடிப்படையில் நோக்கும் போது சிங்கள  இனத்துவ தேசியவாதத்துக்கும் தமிழ் இனத்துவ தேசியவாதத்துக்கும் இடையிலான முரண்  நிலையை முடிவுக்குக் கொண்டுவர இயலாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் இலங்கைச் சமுதாயத்தின் பல்லினத்தன்மையை அங்கீகரிப்பதற்கு அரசு தயாரில்லாமல் இருப்பதே என்பதை அவர் ஒத்துக்கொள்கிறார் என்று புரிந்து கொள்ளக்கூடியதாக  இருக்கிறது. முழுமையான பல்லினத்தன்மைக்கு இலங்கை அரசு  இடங்கொடுக்கக் கூடியதாக அரசு சீர்திருத்த ஏற்பாடுகளை  (State Reforms)  உள்ளடக்கிய ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வந்தால் மாத்திரமே இரு தேசியவாதங்களுக்கும் இடையிலான  தீராத முரண் நிலைக்கு முடிவு கிட்டும் என்பதே  ஹரிம் பீரிஸின் நம்பிக்கையாகவும் இருக்கிறது. ஆனால், அத்தகைய ஆரோக்கியமான அரச சீர்திருத்தங்களுக்கு வழிவிடக்கூடியதாக    தென்னிலங்கை அரசியல் சமுதாயம் இருக்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாகும். அதாவது, பல்லின அரசியல்  சமுதாயம் ஒன்றின் மீது ஒரு இனத்துவ அரசு திணிக்கப்பட்டிருக்கின்ற ஒழுங்கற்ற முறைமை  மாற்றியமைக்கப்படுவதை சிங்களத் தேசியவாதம் அனுமதிக்குமா?

இத்தகைய  கேள்வியின் பின்புலத்தின் இலங்கை அரசின் (Srilanka state) உண்மையான குணாதிசயம் பற்றி ஆழமாகப்  புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எழுகிறது. 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்தின்  முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜெயதேவ உயன் கொடவின் “இலங்கையில் பின்காலனித்துவ அரசு”  (Post Colonial state in Srilanka)   என்ற தலைப்பிலான ஆய்வைப் போன்று இலங்கை அரசின் தன்மையை மிகவும் தெளிவாகவும்  ஆழமாகவும் அரசியல் நுண்ணறிவுத்திறத்துடன் வரலாற்றுப் பின்புலத்தில் விளக்குகின்ற வேறு ஆய்வு அண்மைக்காலத்தில் செய்யப்பட்டிருப்பதாக நம்புவதற்கில்லை. தற்போது நோர்வேயில் வசிக்கும் இலங்கையரான அரசியல்-சமூக ஆய்வாளரும் புத்தி ஜீவியுமான பேராசிரியர்  நடராஜா சண்முகரத்தினத்தின்  சேவைகளைப் பாராட்டி கொழும்பில் அமைந்துள்ள சமூக விஞ்ஞானிகள் சங்கம் 2012 ஆம் ஆண்டில் வெளியிட்ட  (The Political  Economy of Environment and Development  in a Globalised world-Exploring Frontiers )என்ற நூலில் பேராசிரியர் உயன் கொடவின் மேற்கூறிய ஆய்வுக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. இக்கட்டுரையை  இலங்கை நிருவாக சேவையின்  முன்னாள் உயரதிகாரியும் அரசியல்– சமூகவியல்  ஆய்வாளருமான  கந்தையா  சண்முகலிங்கம் தமிழில் மொழிபெயர்த்து சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு  தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவமொன்றில்  வெளியிட்டிருந்தார். அந்த நூலுக்கு  சண்முகலிங்கம்  எழுதிய அறிமுகக் குறிப்பில் பேராசிரியர் உயன் கொடவின்  ஆய்வு முடிவுகள்  தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைகளைப் புதிய கண்ணோட்டத்தில் விளக்கவும்  புரிந்துகொள்ளவும் உதவக்கூடியன என்ற காரணத்தினாலேயே இந்நூலைத் தமிழாக்கம்  செய்திருக்கிறேன் என்று பிரத்தியேகமாகக் குறிப்பிட்டிருக்கிறார். 

உள்நாட்டுப் போரின்  முடிவுக்குப் பின்னரான  இன்றைய கால கட்டத்தில் தங்களது உரிமைப்  போராட்டத்தின்  எதிர்கால அணுகுமுறைகளை தமிழர் அரசியல் சமுதாயம் கடந்த  காலத்தைய போராட்டங்களின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு வகுத்துக் கொள்ளவேண்டியிருக்கின்ற சூழ்நிலையிலும் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையிலும் இலங்கை அரசு பற்றிய பேராசிரியர்  உயன் கொடவின் ஆய்வின் அடிப்படையில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.  அந்த நோக்கத்துக்கான ஒரு பங்களிப்பாகவே சண்முகலிங்கம் இந்த  நூலை வெளியிட்டிருக்கிறார். “ இலங்கையில் உள்நாட்டுப்  போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் நீண்டகாலம் பேராசிரியர் சண்முகரத்தினம்  இலங்கைக்கு  வெளியிலேயே வாழ்ந்து வந்தார்.  என்றாலும், ஒரு ஆய்வாளர் என்ற  வகையில் இலங்கையின் இனத்துவ முரண்பாட்டை பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வின் வழியிலேயே முடிவுக்குக்  கொண்டு வரவேண்டும் என்பது அவரது வேணவாவாக இருந்தது.

அவரது எழுத்துக்களில் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ள சிக்கல்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இலங்கையின்  சமூகத்தையும் அரசையும் இனவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். மீட்க வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.  ஒரு  அரசியல் தீர்வு  வெற்றியடைவதற்கு  இவ்வாறாக சமூகமும்  அரசும் இனவாதத்தில் இருந்து  சுத்திகரிக்கப்பட்டு  மீட்கப்படவேண்டும் என்ற கருத்தை அவர் அழுத்திக் கூறினார்.  சமூகத்தை  இனவாதத்திலிருந்து மீட்டலும் அரசை மதசார்பற்றதாக்கலும்  (De–communalizing  Society and Secularising the state)  என்ற ஒரு பெரிய வேலைத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று அவர் கூறினார். இலங்கையைப் பல்லின மக்கள் சமூகங்களின் ஜனநாயகமாக  (Multi ethnic People's democracy)  மீள் கட்டமைப்புச் செய்தலே இவ்வேலைத்  திட்டமாகும் என்று  சண்முகரத்தினம் கருதினார்”. -இவ்வாறு தனது கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் பேராசிரியர் உயன் கொட அதன் வாயிலாக இலங்கையின் பின்காலனித்துவ அரசு பற்றிய தனது இந்த ஆய்வுக்கான நோக்கத்தை விளங்க வைக்கிறார். அதாவது காலனித்துவ ஆட்சியின் முடிவுக்குப் பின்னர்  இலங்கையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் அரசு நாட்டை பல்லின மக்கள் சமூகங்களின் ஜனநாயகமாக மாற்றியமைப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கும் இடந்தரக் கூடியதா இல்லையா என்ற விவாதத்துக்கு இட்டுச் செல்லக்கூடியதாக பேராசிரியர் உயன் கொடவின்  ஆய்வு அமைந்திருக்கிறது. 1947 தொடக்கம் பதவியில் இருந்த அரசாங்கங்கள் இலங்கை அரசை எவ்வாறு அவற்றின் அரசியல் நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஏற்றமுறையில் கட்டமைத்து வந்திருக்கின்றன என்பதை பேராசிரியர் உயன் கொட தெளிவாக  விளக்கியிருக்கிறார்.  அவரின்  ஆய்வின் விளைவான அவதானிப்புக்களையும் கண்டுபிடிப்புக்களையும் முழுமையாக இங்கு தருவது சாத்தியமானதல்ல. ஆனால், அவற்றில் சில குறிப்புக்களே  இலங்கை அரசு பற்றிய கணிசமான புரிதலைத் தரக்கூடியன என்று நம்பலாம்.

அவையாவன ;

  • இலங்கையின் பின்காலனித்துவ அரசை  நன்கு புரிந்து கொள்வதற்கு நாம் அரசு, அரசாங்கம் என்ற இரண்டையும் பிரித்துப் பார்க்கவேண்டும். நடைமுறை அரசியல் செயன்முறைகளில் அரசு வேறு, அரசாங்கம் வேறு என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை. நடைமுறையில் வெளிப்பட்டுத் தெரியாத இவற்றைப் பகுப்பாய்வுத் தேவைக்காக நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். அரசாங்கம் எவ்வாறு அரசை ஊடுருவி நிற்கிறது என்பதையும் அரசு அரசாங்கத்தின் மீது தங்கியிருப்பதாக  மாறுகிறது என்பதையும் அலசிப்பார்க்க வேண்டும். இதன் மூலமே அரசாங்கத்தின் கொள்கைகளும் முன்னுரிமைகளும் அரசு அதிகாரத்தின் செயற்பாட்டை வரையறை செய்வதையும் மறுவரையறை செய்வதையும்   அதன் மூலம் அரசை  மறு உற்பத்தி செய்வதையும்  கண்டு கொள்ளலாம். 
  • அரசு உருவாக்கம் என்பது சமூக வர்க்கங்களிடையிலும் இனக்குழுமங்களுக்கிடையிலும் ஏற்படும் அரசியல்  போராட்டங்களின் விளைவாக  அமைவது. உண்மையில் இந்த அரசியல் போராட்டங்கள் நடைபெறும் களமாகவும்  அரசு விளங்குகிறது. 1950 களின் நடுப்பகுதியில் இலங்கையின் பின்காலனித்துவ அரசின் வர்க்க உறவுப் பின்னணி மாறியது. இம்மாற்றம் வர்க்கம், இனக்குழுமம் என்ற இரண்டு விடயங்கள் அரசியல் அதிகாரம்  என்ற தளத்தில்  இடைவினை புரிந்ததன் விளைவே  என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 1956 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. இது ஐக்கிய தேசியக்கட்சி என்ற கட்சியில் இருந்து அரசியல் அதிகாரம்  மக்கள் ஐக்கிய முன்னணி என்ற கட்சிக்கு மாறியதை மட்டும் குறித்து நிற்கவில்லை.  குறிப்பிட்ட வகை வர்க்க உறவுகளைக் கொண்ட  அதிகாரக் கூட்டு  (Power Block)  உருவானதையும்  இதில் இணைந்த வர்க்கங்கள் பொதுவான கருத்தியலைக் கொண்டிருந்ததையும்  காணலாம். 
  • இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம்  பெற்றதன் பின்னரான 20  ஆண்டு  காலத்தின் பின் காலனித்துவக் கட்டத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று இலங்கை அரசு  பாராளுமன்ற  ஜனநாயக  நிறுவன அமைப்புகளை வலுப்படுத்திய அரசு உருவாக்கமாக வளர்ச்சி  பெற்றதாகும். 
  • சுதந்திரத்துக்குப் பின்னரான பத்து ஆண்டுகாலத்தில் அரசு இனவாதக் கலப்புடையதாகி இனவாத  அரசாக மாறியது. அல்லது இனக்குழுமப் பெரும்பான்மைவாதம்  (Ethnic majoritarianism)  தலைதூக்கியது என்றும் கூறலாம். 
  • சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் ஆளும் வகுப்பு என்ற  தகுதியைப் பெற்றுக்கொண்ட சிங்களத் தலைமை இனக்குழுமப் பெரும்பான்மை வாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு ஒன்றை நிறுவும் பணியில் முனைப்புடன் செயற்பட்டது. 1956 இல் பதவிக்குவந்த அரசாங்கம் இலங்கை அரசின் இனக்குழுமப் பெரும்பான்மைவாதப் பார்வையை  மேலும் அதிகரிக்கச் செய்தது.  அரசு அதிகாரத்தில் தாமும் சம பங்காளிகளாக  இருக்க வேண்டும் என்றும் சிங்களத் தலைமைக்கு  கீழ்ப்பட்டவர்களாக இருக்கக் கூடாது என்றும் தமிழ்த்தலைமை  கருதியது.  இவ்வாறு  அரசு அதிகாரத்தில் பங்கு என்ற விடயமே  பிற்காலத்தில்  சிங்கள–தமிழ் முரண்பாட்டுக்குக்கு காரணமா  அமைந்தது. 
  • சுதந்திரத்துக்குப் பின்னரான பத்தாண்டு காலத்தில் இலங்கையின் பின்காலனித்துவ அரசு இரு இயல்புகளைக் கொண்டதாக இருந்தது. முதலாவதாக அது ஒற்றையாட்சி மாதிரியில் ஜனநாயக  நிறுவனங்களைக்   கட்டமைத்துச் சென்றது. இரண்டாவதாக இலங்கையின்  பின் காலனித்துவ அரசின்  ஆதார அடித்தளம் சிங்களப் பெரும்பான்மை இனம் என்பதாகச் சுருங்கியது. சிங்களத் தேசியவாதத்தின் அரசியல் பண்பாட்டு  நிகழ்ச்சித்  திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான கருவிதான் அரசு என்ற  சிந்தனை வேரூன்றியது. இப்பின்னணியில் இலங்கை அரசின் லிபரல் ஜனநாயகப் பண்புகளை இல்லாதொழிக்கும் செயல்திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத்  தாராண்மையற்ற அரசாக  மாற்றும் (De liberalization)  செயல் திட்டம் என்று கூறலாம். 
  • சர்வாதிகாரம் இலங்கை அரசியலில் ஒரு முக்கிய அம்சமாகவும் இயல்பாகவும் உள்ளது.  பாராளுமன்ற ஜனநாயகமும் அரசியல்  யாப்புச் சர்வாதிகாரமும் ஒருங்குறையும் இயல்புடையதாக இலங்கை அரசு உருவாக்கம் பெற்றது. பாராளுமன்ற  ஜனநாயகம் சர்வாதிகாரம் முன்வைத்த  அனைத்துத் திட்டங்களையும் தனக்குள் உள்வாங்கிக் கொள்ளச் சம்மதம்  அளித்தது. இதன் மூலம் ஜனநாயகமும் சர்வாதிகாரமும் தமது  பரஸ்பர உறவுகளை முரண்பாடுகள் இல்லாத வகையில் மீள்வரையறை செய்து கொண்டன.  இலங்கையில் பாராளுமன்ற  ஜனநாயகத்துடன் சர்வாதிகாரம்  ஒன்றிணைந்து ஜீவிக்கலாம் என்ற உடன்பாட்டை  நடைமுறைப்படுத்தின. இதனை  வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இலங்கையில்  பாராளுமன்ற ஜனநாயகம் சர்வாதிகாரத்தை தனக்குள் ஏற்று உள்வாங்கிக் கொள்வதான நெகிழ்ச்சிப் போக்கைக் கடைப்பிடித்தது. அத்தோடு சர்வாதிகாரமும்  பாராளுமன்ற ஜனநாயகம் என்ற சட்டகத்திற்குள் இயங்குவதில் தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று கூறிக் கொண்டு ஜனநாயகத்தோடு சேர்ந்து வாழப்பழகிக் கொண்டது. இலங்கையின் பின் காலனித்துவ அரசு உருவாக்கத்தின் (Post colonical state formation)  பிரதான இயல்பாக இது அமைந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21