பொதுவாக மனைவிமார்கள் மீது அலாதி அன்பு கொண்ட கணவன்மார்கள் மனைவிக்கு பிடித்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில், இந்தியாவில் மத்தியப் பிரதேசதம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு தாஜ் மஹால் போல வீட்டைக் கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளார்.

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை நேரில் பார்ப்பது போல அத்தனை தத்ரூபமாக இந்த வித்தியாசமான வீடு அமைந்துள்ளது.

தனது மனைவி மீதுள்ள காதலால் மட்டுமல்லாமல், தாஜ்மஹால் மீதும் உள்ள காதலால் இந்த மாதிரி வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளாராம் .

அவரது பெயர் ஆனந்த் சோக்சே. கல்வி நிறுவனமொன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவியின் பெயர் மஞ்சுஷா சோக்சே.

இவர்கள் புர்ஹான்பூர் என்ற ஊரில் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமானவர் ஆனந்த் சோக்சே. இவருக்கு தாஜ்மஹால் என்றால் ரொம்பப் பிடிக்கும். அவரது மனைவிக்கும் தான்.

ஆனந்த்துக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம் இருந்தது. ஷாஜகானின் மனைவி மும்தாஜ் புர்ஹான்பூரில்தான் மரணமடைந்தார்.

ஆனால் அவருக்கு அங்கு நினைவிடம் கட்டாமல் ஏன் ஆக்ராவில் கட்டினார் ஷாஜகான் என்று யோசித்துக் கொண்டே இருப்பார் ஆனந்த். கடைசியில் அவரே தனது மனைவிக்காக ஒரு தாஜ்மஹாலை புர்ஹான்பூரில் கட்டி விட முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து மிகப் பிரமாண்டமான முறையில் ஒரு வீட்டை கட்டத் தொடங்கினார். அதையும் தாஜ்மஹால் போலவே கட்டத் தொடங்கியுள்ளார்.

4 படுக்கை அறை, தியான அறை, நூலகம் உள்ளிட்டவற்றுடன் கூடிய அந்த பிரமாண்ட வீடு, தாஜ்மஹால் போலவே உருவானது. இந்த புர்ஹான்பூர் தாஜ்மஹாலை கட்டி முடிக்க கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கடந்துள்ளது.

இந்த வீட்டைக் கட்டிய கட்டிட பொறியியலாளர் இதற்காக நேரடியாக தாஜ்மஹாலுக்குப் போய் நிறைய ஆய்வு செய்துள்ளார்.

இதுதவிர இந்தூர், மேற்கு வங்கத்திலிருந்து கட்டடக் கலை நிபுணர்களை வரவழைத்து அவர்களின் ஆலோசனையும் பெறப்பட்டது. இப்படி பல்வேறு நிபுணர்கள் இணைந்து இந்த தாஜ்மஹால் வீட்டை கட்டி எழுப்பியுள்ளனர்.

தாஜ்மஹாலில் உள்ளது போலவே கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மார்பிள் கற்களைக் கொண்டு தரை தளம் அமைக்கப்பட்டுள்ளது.

கீழ்த்தளத்தில் 2 படுக்கை அறைகள், வரவேற்பறை, மேல் தளத்தில் 2 படுக்கை அறைகள், நூலகம், தியான மண்டபம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. வீட்டின் வெளிப்புறம் மட்டுமல்லாமல், வீட்டுக்கு உள்ளேயும் கூட அப்படியே தாஜ்மஹாலில் உள்ளதைப் போலவே விளக்கு வசதியையும் ஏற்படுத்தியுள்ளார்கள்.

மத்தியப் பிரதேசத்தின் தாஜ்மஹால் என்ற பெருமையுடன் கூடிய வீடாக இது உருவாகியுள்ளது. இந்த வீடு இப்போது கிட்டத்தட்ட சுற்றுலாத்தளம் போல மாறி விட்டது.