சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகியிருக்கும் 'சித்திரை செவ்வானம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநரான சில்வா திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.

அண்மையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'மாஸ்டர்' படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்து, இரசிகர்களின் பாராட்டை பெற்றவர் சண்டைப்பயிற்சி இயக்குனர் சில்வா. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, சிங்களம் என பல மொழி திரைப்படங்களுக்கு இவர் சண்டைக்காட்சிகளை அமைத்து இயக்கி வருவதுடன், இரசிகர்களுக்கு நடிகராகவும் அறிமுகமாகியிருக்கிறார். 

இவர் தற்போது முதன்முறையாக 'சித்திரை செவ்வானம்' என்ற படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். 

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வித்யா பிரதீப் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை ரீமா கல்லிங்கல், நடிகை சாய்பல்லவியின் சகோதரியான பூஜா கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை எழுதி படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குநர் ஏ எல் விஜய்.

படத்தைப் பற்றி இயக்குநர் சில்வா பேசுகையில், 

''இயக்குநர் ஏ எல் விஜய் என்னிடம் ஒரு கதை சொன்னார். அதற்கு நான் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறேன். 

அப்பா - மகள் இடையேயான உணர்வுபூர்வமான ஒரு கதைதான் 'சித்திரை செவ்வானம்'. இந்த படம்  ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் டிசம்பர் 3ஆம் திகதியன்று வெளியாகிறது'' என்றார்.

எக்சன் இயக்குநர் திரைப்பட இயக்குநராக உயர்ந்திருப்பதாலும், சமுத்திரக்கனி நடித்திருப்பதாலும் ' சித்திரை செவ்வானம்' படத்திற்கு வழக்கத்தை விட கூடுதலான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.