(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டிற்கு மீண்டும் இரசாயன உரம் இறக்குமதி செய்ய ஜனாதிபதியுடனான கூட்டத்தில் தீர்மானிக்கவில்லை. இரசாயன உரம் இறக்குமதி செய்ய ஜனாதிபதி செயலகத்தினால் எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என சபையில் தெரிவித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அதிக மழைவீழ்ச்சி காரணமாக மரக்கறிகளுக்கு பயன்படுத்த விசேட தாவர உரங்கள் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் 2 வருடங்கள் நாம் கொவிட் வைரஸுடன் போராட வேண்டியிருந்தது. அவ்வாறான நெருக்கடிக்கு மத்தியிலேயே இந்த வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் விவசாயத்துறை அமைச்சர் ஒன்றை கூறுகின்றார், செயலாளர் ஒன்றை கூறுகின்றார்.

இராஜாங்க அமைச்சர் வேறொன்றை கூறுகின்றார் என எதிர்க்கட்சி தலைவர் கூறினார். நாம் யாரும் மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கவில்லை. மூவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து ஜனாதிபதியின் கொள்கையுடன் உள்ளோம்.

சீனாவின் இரசாயன உரத்தை கொள்வனவு செய்வதை நிறுத்தியவுடன், எமது விவசாயத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து உரம் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது. 

இது குறித்து பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து எம்மிடம் கேள்வி கேட்க அவசியம் இல்லை, வேண்டும் என்றால் கோப் குழுவில் முறையிட்டு விசாரணைகளை முன்னெடுக்க முடியும், இயற்கையுடன் இணைந்த விவசாயத்தை முன்னெடுக்க எடுத்த தீர்மானத்துடன் நான் தொடர்ந்தும் உள்ளேன். அதிலிருந்து நான் மாற மாட்டேன் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி,

உரம் இறக்குமதி செய்வது குறித்து இன்று காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது, அது குறித்து உங்களின் நிலைப்பாடு என்னவென கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த,

நெல் உற்பத்திக்காக இரசாயன உரம் இறக்குமதி செய்ய ஜனாதிபதியுடனான சந்திப்பில் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் அதிக மழைவீழ்ச்சி காரணமாக நாசமாகியுள்ள மரக்கறிகளை மீட்டெடுக்க விசேட உரம் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தவிர்ந்து வேறு எந்த உரமும் இறக்குமதி செய்யப்படாது என்றார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்கார தனது உரையில் மீண்டும் உரம் குறித்த கேள்வி எழுப்பிய வேளையில் அதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த,

இரசாயன உரம் இறக்குமதி செய்ய ஜனாதிபதி செயலகத்தினால் எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்படவில்லை. ஆனால் தாவர உரம் இறக்குமதி செய்யப்படும். அதிக மழைவீழ்ச்சி காரணமாக விசேட தாவர உரங்கள் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.