சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவிருக்கும் ‘மைக்கேல்’ என்ற புதிய படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒப்புக்கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து 'மைக்கேல்' என்ற புதிய எக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது. 

இதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். 

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். 

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படங்களை இயக்குவதுடன் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் வில்லனாக நடித்து இரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.  

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வலைத்தளத் தொடர்களிலும் நடித்து வரும் அவர், தற்போது மைக்கேல் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். 

இதற்காக படக்குழுவினர் பிரத்கேய லுக் ஒன்றையும் இன்று வெளியிட்டிருக்கிறார்கள். இதில் இரத்தம் தோய்ந்த கையும், கைவிலங்கும் இடம்பெற்றிருப்பதால் இணைய தலைமுறையினரிடத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.