பொதுஜன பெரமுனவின் கூச்சல்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை - வரவு - செலவுத் திட்டத்தை ஆதரிப்போம் என்கிறது சுதந்திரக் கட்சி 

22 Nov, 2021 | 01:49 PM
image

(எம்.மனோசித்ரா)

வீதி சமிக்ஞைகளைப் போன்று நாட்டில் இடம்பெறும் அனைத்து செயற்பாடுகளுக்கும் கைகளை உயர்த்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

சுதந்திர கட்சி அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களின் சார்பாகவே தீர்மானங்களை எடுக்கிறது. 

இதனை எதிர்க்கும் வகையில் பொதுஜன பெரமுனவில் எமக்கு எதிராக கூச்சலிட்டுக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் நாம் கவனத்தில் கொள்வதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்திற்கான புதிய தொகுதி அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை திங்கட்கிழமை (22) சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. 

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கட்சியாக தனித்து பயணிப்பதற்காக நாம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. 

கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

கூட்டணியில் இருப்பதற்காக கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காமலிருக்க முடியாது. 

காரணம் ஏனையவர்களின் வாக்குகளை நம்பிக் கொண்டிருக்க முடியாது. எமது வாக்குகளை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுஜன பெரமுனவிலுள்ள சிலர் வெளியிடும் கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்வதில்லை. 

காரணம் நாம் அவர்களுடன் பேசி கூட்டணியமைக்கவில்லை. உரிய நேரத்தில் நாம் உரிய தீர்மானங்களை எடுப்போம். 

கூச்சலிடுபவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனை மாத்திரமே செய்து கொண்டிருப்பர். ஆனால் அறிவுடைய மக்கள் எமது தீர்மானம் சரியானதா தவறானதா என்பதை நன்கு அறிவர்.

வீதி சமிக்ஞைகளைப் போன்று நாட்டில் இடம்பெறும் அனைத்து செயற்பாடுகளுக்கும் கைகளை உயர்த்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

 எனவே எமது செயற்பாடுகளை நாம் தொடர்ந்தும் முன் கொண்டு செல்வோம். வரவு - செலவு திட்டத்தில் காணப்படுகின்ற சிக்கல்கள் தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே நாம் எமது நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தோம்.

இந்த வரவு - செலவு திட்டத்தை விடுத்து பிரிதொரு வரவு - செலவு திட்டத்தை யாரேனும் ஒருவரால் சமர்ப்பிக்க முடியுமாயின் அதனை செய்ய முடியும். 

எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள நிலைமையில் நாம் அனைவரும் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளோம். 

எனவே பொருளாதாரத்தை உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் இந்த வரவு - செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. 

எனவே நாம் அதனை ஆதரிப்போம். சுதந்திரக் கட்சி மக்களின் சார்பாகவே தீர்மானங்களை எடுக்கிறது என்பதை அவர்கள் அறிவர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right