நா.தனுஜா

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களது பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்திட்டம் எம்வசமுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் விவசாயிகளின் அனைத்துத்தேவைகளும் பூர்த்திசெய்யப்படும் அதேவேளை, மொத்தத் தேசிய உற்பத்திக்கு விவசாயத்துறையின் ஊடாக வழங்கப்படும் பங்களிப்பை மேலும் அதிகரிக்கும் வகையிலான விவசாயப்புரட்சியொன்றையும் நிகழ்த்துவோம் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைத்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட சஜித் பிரேமதாஸ அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தேர்தல்களின்போது விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறக்கடிப்பதற்காக சேதன உரப்பயன்பாட்டைக் கட்டாயமாக்குவதாக அரசாங்கம் சடுதியாக அறிவித்தது. அதன்பின்னர் சேதன மற்றும் இரசாயன உரத்தின் கலவையை உருவாக்கப்போவதாகவும் கூறினார்கள். 

ஆனால் சேதன உரத்தை மாத்திரம் பயன்படுத்தி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது என்றும் அதனால் விளைச்சலில் 21.5 - 31 சதவீத வீழ்ச்சி ஏற்படும் என்றும் விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை தொடர்பான விசேடநிபுணர்கள் கூறுகின்றனர். 

துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள், பரிந்துரைகள் அனைத்தையும் புறக்கணித்து சேதன உரத்தை மாத்திரம் பயன்படுத்துவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.

அதனைத்தொடர்ந்து தீங்கேற்படுத்தும் நுண்ணுயிரிகள் அடங்கிய உரம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. அதனைத் திருப்பியனுப்பிய பின்னரும்கூட அந்த உரத்தை ஏற்றிய கப்பல் இலங்கையின் கடற்பரப்பைச்சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி விஞ்ஞானபூர்வ ஆய்வுகளின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகளுக்குப் புறம்பாக நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்திருப்பதுடன் அதற்கு ஒப்பீட்டளவில் அதிக விலை செலுத்தப்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானங்களின் விளைவாகவே தற்போது விவசாயிகள் மிகமோசமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். 

அறிவியல் ஆய்வுகளை மையப்படுத்தி விஞ்ஞானபூர்வமான தீர்மானங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக்கொண்டவையாகவே அரசாங்கத்தின் தீர்மானங்கள் அமைந்துள்ளன. கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளும் விடயத்தில் ஏனைய நாடுகள் தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதில் நாட்டம் காண்பித்த வேளையில் எமது அரசாங்கம் மாத்திரம் பாணி மருந்தை நம்பிக்கொண்டிருந்தது.

நாடு மிகமோசமான நெருக்கடியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவிற்கு வாழ்க்கைச்செலவு அதிகரித்திருக்கின்றது. ஒருவேளை உணவருந்தியதன் பின்னர் மறுவேளை உணவை எங்கிருந்து, எவ்வாறு பெற்றுக்கொள்வது என்று சிந்திக்கவேண்டிய நிலையில் மக்கள் இருக்கின்றார்கள். 

அதுமாத்திரமன்றி சீனி, பால்மா, சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றார்கள். இவ்வாறு வரிசைகளில் காத்திருக்கும் யுகத்தைத் தோற்றுவிப்பதற்காகவா 69 இலட்சம் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள்? 

விவசாயிகளின் பெரும் ஆதரவினால் ஆட்சிபீடமேறிய அரசாங்கம் தற்போது அவர்களது தேவைகளை முழுமையாகப் புறக்கணித்து நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. அதுமாத்திரமன்றி விவசாயிகளின் நிலங்களைத் தரிசு நிலங்களாக்கி, அவற்றை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் எம்வசமிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் விவசாயிகளுக்கு அவசியமான உரம், கிருமிநாசினி உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும் என்பதை உறுதியாகக்கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அத்தோடு நாட்டின் மொத்தத்தேசிய உற்பத்திக்கு விவசாயத்துறையின் ஊடாக வழங்கப்படும் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலான விவசாயப்புரட்சியொன்றை ஏற்படுத்துவோம். அதுமாத்திரமன்றி தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கு வாய்ப்பேற்படுத்துவோம் என்று குறிப்பிட்டார்.