(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
யாழ் மாநகரசபை போன்று அனைத்து உள்ளூராட்சி சபைகளும் வேலை செய்தால் நிச்சயமாக எமது பிரதேசங்கள் மேலும் அபிவிருத்தியடையும் என தெரிவித்த பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் ,எமது அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விமர்சிக்கும் தமிழ்கட்சிகள் அவர்களின் நல்லாட்சியில் ஏன் இதில் சிறு பகுதியையேனும் செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (20) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மக்கள் பல சவால்களையும் இன்னல்களையும் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா அலைகள், அதிக விலைவாசி உயர்வுகள், பதுக்கல்கள்,உணவுப் பற்றாக்குறை என இலங்கை மட்டுமன்றி உலகம் முழுவதும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்கள் இதற்கான தீர்வுகளை இந்த வரவு செலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கின்றனர். இதற்கான தீர்வுகள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றே நானும் நம்புகின்றேன்.
ஏற்கனவே பல சுமைகளையும் சுமந்து கொண்டிருக்கும் மக்களுக்கு மேலும் சுமைகளை சுமத்தாமல் இருப்பதே இதில் முதல் தீர்வாகும். வழமையான வரவு செலவுத்திட்டத்தில் மக்களிடமிருந்து வரிகள் மூலம் பணத்தை எடுத்து அபிவிருத்தி திட்டங்களுக்கு கொடுப்பதாகவே இருந்தது.
ஆனால் இம்முறை ஒரு சொற்ப நபர்களிடமிருந்து நிதியை எடுத்து மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்களின் வலியை,சுமையை அறிந்து தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமாகவே உள்ளது.
மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வுகள் இதில் இல்லாதுவிட்டாலும் நீண்டகால திட்டங்கள் உள்ளன. உற்பத்திகளை அதிகரிக்கும் போது பொருட்களின் விலைகள் குறைவடையும். இந்த வரவு செலவுத்திட்டம் சுதந்திரத்திற்கு பின்னர் வந்த புரட்சிகர வரவு செலவுத்திட்டமாகவே உள்ளது.
கிராமிய அபிவிருத்தியில் ,உள்ளூர் உற்பத்திகளில் அதிக அக்கறை கொள்ளப்பட்டு சாத்தியமான, நேர்மையான வரவு செலவுத்திட்டமாகவும் உள்ளது. இக்கட்டான காலகட்டத்தில் எது சாத்தியமோ அது இதில் உள்ளது.
இதனை விட கடந்த ஒன்றரை வருடங்களில் இந்த அரசும் நாமும் எமது மக்களுக்கு செய்த அபிவிருத்தி பணிகள் ஏராளம். ஒவ்வொரு கிராமத்துக்கும் 20 இலட்சம் ரூபா, யாழ் மாவட்டத்தில் மட்டும் 3100க்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன ,யாழ் மாவத்தில் ஒரே தடவையில் 26 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்கப்பட்டுள்ளன.
குடாநாட்டு மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கும் தீர்வு முன் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் 16 உற்பத்திக்கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 20 இளைஞர் ,யுவதிகள், பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு, யாழ் மாவட்டத்தில் 6 நகரங்கள் பல் பரிபான நகரங்கள் அபிவிருத்திக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
30 விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறுஇன்னும் பல அபிவிருத்தி திட்டங்கள் வடக்கில் மட்டும் முன்னடுக்கப்பட்டுள்ளன. முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் விழுந்த வாக்குகள் 374401.யாழ்மாவட்டத்தில் விழுந்த வாக்குகள் 23261.வாக்குகளில் வித்தியாசம் இருந்தாலும் நிதி ஒதுக்கீடுகளில் வித்தியாசம் இல்லையென்பதனை நான் அடித்துக் கூறுகின்றேன். 14021 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் சரி சமமான நிதி ஒதுக்கீடாக 30 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு அற்புதமான வேலைத்திட்டம்.
இன்று வடக்கில் பல இடங்களில் வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வசமே உள்ளன. அவர்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் இந்தப்பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்காது.ஆனால் அவர்கள் வீதிகள் அமைப்பதாலேயே வெள்ளப்பாதிப்புக்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
யாழ் மாநகரத்தில் கடந்த வாரம் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் உடனடியாக வழிந்தோடியது. யாழ் மாநகரசபையினர் இந்த வருட முற்பகுதியில் வடிகான்களை துப்புரவாக்குவதற்க பல நடவடிக்கைகள் எடுத்திருந்தனர். அதனால் வெள்ளம் உடனடியாகவே வழிந்தோடியது.
எனவே யாழ் மாநகரசபைக்கும் முதல்வருக்கும் உறுப்பினர்களுக்கும் களப்பணியாளர்களுக்கும் நான் மக்களின் சார்பாக நன்றி கூறுகின்றேன். யாழ் மாநகரசபை போன்று அனைத்து உள்ளூராட்சி சபைகளும் வேலை செய்தால் நிச்சயமாக எமது பிரதேசங்கள் மேலும் அபிவிருத்தியடையும்.
எமது அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விமர்சிக்கும் தமிழ்கட்சிகள் அவர்களின் நல்லாட்சியில் ஏன் இதில் சிறு பகுதியையேனும் செய்யவில்லை?அவர்கள் செய்தது வெறுமனே கம்பெரேலிய. அதாவது தமது விருப்பு வாக்குகளை எப்படி அதிகரிக்க முடியும் என்ற திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினர்.
யாழ் கூட்டுறவுத்துறைக்கு கொடுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபாவைக்கூட இவர்கள் சரியாக பயன்படுத்தாது வீணடித்தனர் ,எமது அரசைப்பொருத்தவரையில் யார் யார் எல்லாம் தமக்கு உதவத்தயாராக இருக்கின்றனரோ அவர்களுக்கு உதவ அரசு தயாராயிருக்கின்றது என்றார்.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM