ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

போரில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவேந்த அரசாங்க  அனுமதித்தால் தமது துயர் குறைய அழுது விட்டு அமைதியடைந்து விடுவார்கள். 

ஆனால்  போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால்  எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19)  இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

இந்த மாதம் கார்த்திகை மாதம் என்பதனால் நீதிமன்ற தடை உத்தரவுகளை வீடு வீடாக சென்று ஒவ்வொருவருக்கும் பொலிஸார் கொடுத்து வருகின்றனர். 

எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  கொடுக்கப்பட்டுள்ளது. போர் மௌனித்துவிட்டது,போரில் தனது இனம், மண்ணுக்காக மரணித்தவர்களை நினைவு  கூருவதற்கான வாய்ப்புக்களை இன்று அரசாங்கம்  தடுக்கின்றது.

இவ்வாறு தடுப்பதன் மூலம் எதனை நீங்கள் சாதிக்கபோகின்றீர்கள்? இதனை நீங்கள் சாதாரணமாகவிட்டீர்கள் என்றால் எமது மக்கள் அந்த நாளில் நினைவு கூர்ந்து  ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பார்கள்.  

தமது துயர் குறைய அழுது விட்டு அமைதியடைந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் தடுக்கத்தடுக்க எமது மக்கள் இன்னும் வீறுகொண்டு எழுவார்கள்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு பேச்சின் மூலமாக,எழுத்தின் மூலமாக கண்டுவிடலாம் என நீங்கள் நினைக்கக்கூடாது. இந்த நாட்டில் உள்ள அத்தனை இனமும் சுதந்திரமாக வாழ்கின்ற வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

 கார்த்திகை விளக்கு என்பது இந்து மதத்தவர்களின் பாரம்பரியம். அதற்கு கூட தடை விதிக்கப்பட்டது. ஆகவே இந்த விடயத்தில் அரசாங்கம் தனது தடை உத்தரவுகள் வழங்குவதனை நிறுத்த வேண்டும். நீங்கள் நினைப்பதுபோல் செயற்பட நினைப்பீர்களேயானால் இந்த நாட்டில் ஒருபோதுமே உங்களால் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்றார்,