(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

மலையக மக்களுக்கு வீடமைப்பு முக்கியமில்லை. காணி உரிமையே தேவையாகும். 150 வருடங்களாக வாழ்பவர்களுக்கு காணி உரிமை இல்லாமல் இருக்கின்றனர்.

அவர்களுக்கு காணி இருந்தால் வீடுகளை கட்டிக்கொள்ள முடியுமானவர்கள் மலையகத்தில் இருக்கின்றனர். அத்துடன் மலையகத்துக்கு பல்கலைக்கழகம் வரும். அதனை யாராலும் மாற்ற முடியாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (20) இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2021 வரவு செலவு திட்டத்தில் பல வேலைத்திட்டங்களை முன்வைத்தோம். என்றாலும் கொவிட் தொற்று காரணமாக நாங்கள் நினைத்த அளவு அந்த வேலைத்திட்டங்களை செய்துகொள்ள முடியாமல்போனது. ஒதுக்கப்பட்ட நிதியில் அதிகம் கொவிட் கட்டுப்பாட்டுக்காக செலவிடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் நாள் ஒன்றுக்கு 175 தொற்றாளர்கள் பதிவாகி வந்தது. பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டடுள்ள அந்த மக்கள் பல்வேறு கொவிட் மத்திய நிலையங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு வந்தனர்.

அதனால் ரம்பொடையில் உள்ள தொண்டமான் கலாசார நிலையம் மற்றும் தொண்டமான துறைப்பயிற்சி நிலையமும் கொவிட் நிலையங்களாக மாற்றினோம். அதேபோன்று மஸ்கெலியாவில் இரண்டு  வைத்தியசாலைகளை புதுப்பித்தோம். இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டு கொவிட் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 35 வரை குறைக்க முடிந்தது.

அத்துடன் எமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் பாரிய தொகையை கொவிட் கட்டுப்பாட்டுக்காக செலவிடப்பட்டது. என்றாலும் எங்களால் முடிந்த அபிவிருத்திகளை மேற்கொண்டோம். குறிப்பாக பெருந்தேருக்கள் அமைச்சின் உதவியால்  மலையகத்தில் பாதை அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறன.

நீண்டகாலமாக மலையகத்தில் வீதி அபிவிருத்திகள் இடம்பெறவில்லை. தற்போது 350க்கும் மேற்பட்ட கிலாே மீட்டருக்கும் அதிக தூரத்துக்கு வேலை இடம்பெறுகின்றது.

மேலும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நாங்கள் பிரதான மூன்று விடயங்களை இலக்குவைத்திருக்கின்றோம். அதாவது கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை. இந்த மூன்று விடயங்களும் மலையகத்தில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

இந்த மூன்றுக்கும் முக்கியத்துவம் வழங்கினால் நிச்சயமாக எங்களுக்கு முன்னேறமுடியும். மலையகத்தில் ஸ்மாட் வகுப்பு உருவாக்க 250 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் அரசாங்கம் தோட்ட வீடமைப்புக்கு வெறும் 500மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து எதிர்க்கட்சி விமர்சித்து வருகின்றது.

அது தவறான கருத்து, 500மில்லியன் மேலதிகமாகவே வீடமைப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.ஏனெனில் எமது அமைச்சுக்கு இரண்டாயிரத்தி 471மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிதியில் மலையகத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை அறிவிப்போம். கொவிட் கால கட்டத்திலும் மலையகத்தில் அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்கின்றன. அபிவிருத்தி இடம்பெறவில்லை என யாருக்கும் தெரிவிக்க முடியாது.

அத்துடன் பெருந்தோட்டம் தொடர்பான பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேச பயனில்லை. பெருந்தோட்ட கம்பனிகளுடனே பேசவேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து இரு தரப்பினரும் வெளியேறி இருப்பதால், பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுகின்றன.

மஸ்கெலியாவில் பாரிய அடக்குமுறை இடம்பெறுகின்றது. இதற்கு அரசாங்கமோ எதிர்த்தரப்போ காரணமில்ல. கம்பனிகளே இதற்கு காரணமாகும்.

கூட்டு ஒப்பந்தம் இல்லாமையால் அவர்கள் நினைத்த பிரகாரம் செயற்படுகின்றன. அதனால் கூட்டு ஒப்பந்தம் தேவை என்று நாங்கள் தெரிவித்துவந்தோம். என்றாலும் தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடர்பாக எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெற இருக்கும் கலந்துரையாடலில் மக்களின் பிரச்சினை தொடர்பாக பேசுவோம்.

அத்துடன் மலையத்துக்கு இருக்கும் பிரதான பிரச்சினை வீடமைப்பு அல்ல. காணி பிரச்சினையாகும். வீடமைப்பை பொறுத்தவரையில் மலையகத்துக்கு இந்திய அரசாங்கத்தினால் 14ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட இருக்கின்றன.

எமது அரசாங்கத்தினால் வருடத்துக்கு ஆயிரம் வீடுகள்தான் நிர்மாணிக்க முடியும். ஒரு இலட்சம் வீடுகள் மலையகத்துக்கு தேவைப்படும் நிலையில் 14ஆயிரம் வீடுகளுக்காக நாங்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றோம். ஆனால் 150 வருடஙகளாக வாகழும் அந்த மக்களுக்கு காணி உரிமை இல்லை.

ஆனால் 30வருடத்துக்கு முன்னர் வந்த துறைமாருக்கு காணி உரிமை இருக்கின்றது. இது எந்தளவுக்கு நியாயம். எமது மக்கள் நினைத்தால் அவர்களுக்குரிய வீடுகளை கட்டிக்கொள்ள முடியும்.

அந்த வசதிகள் அவர்களுக்கு இருக்கின்றன. என்றாலும் சொந்த காணியில் வீடு கட்டவேண்டும் என்றே இருக்கின்றனர்.  அதனால் அந்த மக்களுக்கு வீடு வழங்குவதைவிட அவர்களுக்கு சொந்தமாக காணி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எமது கட்சியின் இலக்கும் அந்த மக்களுக்கு காணி பெற்றுக்கொடுப்பதாகும்.

மேலும் மலையகத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு பொருத்தமான காணி தேடிக்கொண்டிருக்கின்றோம். நாங்கள் நினைத்திருந்திருந்தால் கட்டிடத்தை கொடுத்து பல்கலைக்கழகம் அமைத்திருக்கலாம். ஆனால் எமது நோக்கம் அதுவல்ல. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பல்கலைக்கழகம் அமைப்பதே எமது நோக்கம்.

அதனை அமைத்தே ஆகுவோம். மலையகத்துக்கு பல்கலைக்கழகம் வரும் . அது இலங்கை தொழிலாளர் காங்கிரஸினாலே உருவாக்கப்படும் அதனை யாராலும் தடுக்க முடியாது என்றார்.