மஹிந்த தோல்வியுற்ற பின் ராஜபக்ஷ சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறியதைப் போன்று இனிவரும் காலங்களிலும் நாடைபெறும் - குமார வெல்கம

20 Nov, 2021 | 01:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவதற்கு அவரது சகோதரர்களின் வெறுக்கத்தக்க செயற்பாடுகள் பிரதான காரணியாக அமைந்தது. 

தேர்தலில் தோல்வியடைந்ததும் அவரது சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இனிவரும் காலங்களிலும் அவ்வாறே நிகழும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பலவீனமான அரச தலைவர் என்பதையும், அவரது வெற்றி, தோல்வியை முகப்புத்தகம் பக்கத்தை அவதானித்தால் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் என்றும் குமார வெல்கம தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள். 

நாடு பல துறைகளிலும் பெரும் பாதிப்புக்களை எதிர்க் கொண்டுள்ளது. மூத்த அரசியல்வாதிகள் எதிர்கால தலைமுறையினரை கருத்திற் கொண்டு அரசியல் ரீதியில் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த கால சம்பவங்களை மீட்டிப்பார்ப்பது அவசியமாகும். 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்26ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் இடைக்கால அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. 

52 நாள் இடைக்கால அரசாங்கம் தோற்றுவிக்கப்படுவதற்கு முதல் நாள் பேராசிரியர் ஜி.எல் பீரிஸின் இல்லத்தில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது அப்பேச்சுவார்த்தையில் 53 அரசியல் பிரமுகர்கள் கலந்துக் கொண்டார்கள்.

இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்க வேண்டாம் என நானும், அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டோம். குறுக்கு வழியில் பிரதமர் பதவியை பெறுவது சட்டத்திற்கு முரணானது என அமைச்சர் சமல் ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவ்வேளையில் ஆலோசனை வழங்கினார். 

அவரது ஆலோசனைகளுக்கு எதிராக ஏனையவர்கள் ஆலோசனை வழங்கியதால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ' முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியை வழங்கினால் அதனை ஏற்பேன் என்றார்.

52 நாள் இடைக்கால அரசாங்கத்தில் தேவையான அமைச்சு பதவியை ஏற்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்னிடமும், அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடமும் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமான அரசாங்கம் நெடுநாள் நிலைக்காது ஆகவே எந்த அமைச்சு பதவியும் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டு வெளியேறினேன். 

இறுதியில் நீதிமன்றம் இடைக்கால அரசாங்கம் அரசியலமைப்பிற்கு முரண் என சுயாதீனமான முறையில் தீர்ப்பளித்தது.

2019ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்தேன். 

அரச நிர்வாகம் தொடர்பான திறன் இல்லாதவர் அரச தலைவராகுவதற்கு தகுதியற்றவர் என்பதை நாட்டு மக்களிடம் பகிரங்கமாக குறிப்பிட்டேன். நான் குறிப்பிட்டதை மக்கள் மாத்திரமல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்.அவர்   பலவீனமான அரச தலைவர் என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தை நாட்டு மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள். 

30 வருட கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து அனைத்து இன மக்களையும் ஒன்றுப்படுத்தினார். குறுகிய காலத்தில் நாடும் அபிவிருத்தி செய்யப்பட்டது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு  வரையிலான காலப்பகுதியில் அவரது ஆட்சியை நாட்டு மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களை வரையறையற்ற வகையில் அரசியலில் இணைத்துக் கொண்டதால் அவரது ஆட்சியை மக்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள். 

அதன் காரணமாக அவர் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். அதனை தொடர்ந்து அவரது சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள் அவருக்கு ஆதரவாக நாட்டு மக்கள் குரல் கொடுத்தார்கள்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கமும் பலவீனமானது. நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்களை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றிற்கு வழங்கினார். 

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாடு நல்லாட்சி அரசாங்கத்தை முழுமையாக பலவினப்படுத்தியது.

2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாராளுமன்றிற்கு வழங்கிய நிறைவேற்று அதிகாரத்தை மீண்டும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் முழுமையாக ஆதரவு வழங்கினார்கள் அச்செயற்பாடு பொது கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்தார்கள். பிரதேச சபை உறுப்பினராக கூட பதவி வகிக்காத ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படுவது பொருத்தமற்றது ,ஆகவே அவர் அரச நிர்வாகத்திற்கு தகுதியற்றவர் என்பதை எனது 40 வருட கால அரசியல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டேன். எமது கருத்தை மக்கள் அப்போது விமர்சித்தார்கள் தற்போது முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகம் பலவீனமானது என்பதையும் அவரது வெற்றி தோல்வியையும் முகப்புத்தகம் பக்கம் சென்றால் அறிந்துக் கொள்ளலாம். தனக்கு அரசியல் அனுபவம் போதாது என்பதை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த 2 வருட காலத்தில் நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளது எதிர்காலத்தில் அவற்றிற்கு சிறந்த தீர்வு பெற்றுக் கொள்வது குறித்து நாட்டு மக்கள் முறையாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right