(எம்.ஆர்.எம்.வசீம்)

அரச நிதியை கொள்ளையடித்தவர்கள் ரணில் விக்ரமவிங்கவுடன் இருந்தவர்களா அல்லது ராஜபக்ஷ்வுடன் இருந்தவர்களா என்பதை பசில் ராஜபக்ஷவின் வரவு - செலவு திட்ட அறிக்கை மூலம் மக்களுக்கு உணர்ந்துகொள்ளலாம்.

அத்துடன் நாட்டில் பாரியளவில் டொலர் தட்டுப்பாடு இருந்து வருகின்றபோதும் அதனை பெற்றுக்கொள்ள எந்த யோசனையும் அரசாங்கத்திடம் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி பணத்தை திறைசேரிக்கு பெற்றுக்கொள்வதாக நிதி அமைச்சர் தனது வரவு - செலவு திட்டத்தில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தில் மத்திய வங்கி பிணைமுறி மூலம் கொள்ளையடிக்கப்பட்ட 8.5 பில்லியன் ரூபா பணத்தை அடுத்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டத்தில் இணைத்துக்கொண்டுள்ளதாகவும் அதனை திறைசேரிக்கு பெற்றுக்கொள்வதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் வரவு செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

நாங்கள் அரசாங்கத்தில் இருந்து, தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கும்போது இவர்கள் தொடர்ந்து தெரிவித்துவந்த விடயம்தான், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர்  மத்திய வங்கியை கொள்ளையடித்த என்ற குற்றச்சாட்டாகும்.

அத்துடன் மத்திய வங்கியை கொள்ளை அடித்திருந்தால், அந்த பணம் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருடன் இருந்தவர்களிடமே இருக்கவேண்டும்.

அது மத்திய வங்கியில் இருக்க முடியாது.இந்தளவு காலம் எமக்கு எதிராக தெரிவிக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டு, வெறும் சேறு பூசும் நடவடிக்கை என்பது நிதி அமைச்சரின் நாவினாலேயே தெரிவிக்கவேண்டி ஏற்பட்டது. 

இந்த முறை வரவு செலவு திட்டத்தில் 8.5பில்லியன் ரூபா திறைசேரி ஊடாக அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அன்று இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி சம்பவத்தில் 13பில்லியன் ரூபாவை, ரணில் விக்ரமசிங்க பிரதமர் என்றவகையில் அர்ஜுன் அலாேசியசஸ் நிறுவனத்தின் பணத்தை அரசாங்கத்திடம் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.

அத்துடன் அன்று ரணில் விக்ரமசிங்க அரச மயமாக்கிய அர்ஜுன் அலோசியஸ் நிறுவனத்துக்கு உரிய  பணத்தொகையையே தற்போது பசில் ராஜபக்ஷவுக்கு வரவு செலவு திட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடியுமாகி இருக்கின்றது.

அதனால் மத்திய வங்கியில் இருந்து ரணில் விக்ரமசிங்க கொள்ளையடித்ததாக தெரிவித்த அந்த பணம் மத்திய வங்கியிலேயே இருந்தது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது .

ஆனால் ராஜபக்ஷ் குடும்பத்தினர், அவர்களின் உறவினர்கள் இந்த நாட்டின் சொத்துக்கள் மற்றும் பாரிய பணத்தொகையை திருடிக்கொண்டு வெளிநாடுகளில் வைப்பு செய்திருகப்பதாக பன்டொரா அறிக்கையில் வெளிப்பட்டிருக்கின்றது.

அந்த கறுப்பு பணம் இலங்கைக்கு கொண்டுவரவும் முடியாது. கொண்டுவரவும் இல்லை. அப்படியாயின் உண்மையான கொள்ளைக்காரர்கள், திருடர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இருந்தவர்களா அல்லது ராஜபக்ஷ்வினருடன் இருந்த, இருக்கின்றவர்களா என்பதை நாட்டு மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

அத்துடன் அரசாங்கம் அடுத்த வருடத்துக்காக சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்டத்தில்  ஆராேக்கியமான எந்த திட்டமும் இல்லை.

நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அத்தியாவசிய பொருட்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. 

அதேபோன்று டொலர் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இந்த பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்ற எந்த யோசனையும் வரவு செலவு திட்டத்தில் இல்லை. அதேபோன்று பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு எந்த நிவாரணமும் முன்வைக்கப்படவில்லை என்றார்.