(எம்.மனோசித்ரா)

அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தினால் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் மற்றொரு தொற்று பரவலை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

சிறு குழந்தை முதல் உயர் மட்டத்திலுள்ள நிறைவேற்றதிகாரி உள்ளிட்ட அரசியல்வாதிகள் என அனைவரும் தமது சமூக பொறுப்பினை முறையாக நிறைவேற்றினால் அதனைத் தவிர்க்க முடியும் என்று விசேட வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தொற்று அபாயம் இன்னும் முற்றாக ஒழியவில்லை. நாளாந்தம் சுமார் 13,000 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளிலும், இடைநிலை பராமறிப்பு நிலையங்களிலும், இவர்களில் 75 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதன் மூலம் இது தெளிவாகிறது. எனவே சுகாதார விதிமுறைகளைக் கைவிட்டு வழமையைப் போன்று நடமாட முடியாது.

அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தினால் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் மற்றொரு தொற்று பரவலை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எம்மால் அதனை தவிர்க்க முடியும். எமது சமூக பொறுப்பினை முறையாக நிறைவேற்றினால் அதனைத் தவிர்க்க முடியும். 

சிறு குழந்தை முதல் உயர் மட்டத்திலுள்ள நிறைவேற்றதிகாரி உள்ளிட்ட அரசியல்வாதிகள் என அனைவருக்கும் காணப்படுகின்ற பொதுவான பொறுப்பு இதுவாகும்.

எனவே, ஒவ்வொருவரையும் தனிப்பட்ட ரீதியில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம். ஏனைய நாடுகளுக்கு சமாந்தரமாக பல வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். 

73 சதவீதமானோருக்கு ஏதேனுமொரு தடுப்பூசியேனும் வழங்கப்பட்டுள்ளதோடு, 62 சதவீதமானோருக்கு முழமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94 சதவீதமானோர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இன்னும் 6 சதவீதமானோர் இதுவரையிலும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமலுள்ளனர். இவர்களுக்கான தடுப்பூசி வழங்கலுக்காக தேசிய தடுப்பூசி தினமொன்றை பிரகடனப்படுத்தி தடுப்பூசியை வழங்குமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம். 

இதன் மூலம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பை தவிர்க்க முடியும். கொவிட் தொற்று அபாயம் இன்னும் நிறையவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.