ஆண், பெண் என பாலின பேதமின்றி இரண்டு இலட்ச பேரில் ஒருவருக்கு ஏற்படும் அரியவகை பாதிப்பான லேமல்லர் இக்தியோஸிஸ் என்ற தோல் பாதிப்பிற்கு தற்போது நவீன பாணியிலான சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய திகதியில் உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

இதில் 72 சதவீத அரியவகை பாதிப்புகள் பாரம்பரிய மரபணு குறைபாட்டின் காரணமாக ஏற்பட்டது என்றும், அதில் 70 சதவீத குழந்தைகள் மரபணு மாற்றம் காரணமாக அரிய வகை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் உலகில் பிறக்கும் இரண்டு இலட்சக் குழந்தைகளில் ஒருவருக்கு லேமல்லர் இக்தியோஸிஸ் என்ற அரிய வகை தோல் பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தோல்கள் மிகவும் இறுக்கமாக அமைந்துவிடுவதால் அவர்களால், அவர்களின் கண்களின் இமைகளைக் கூட இயல்பான அளவில் திறந்து மூட இயலாத அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள். 

இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து lamellar ichthyosis, collodion baby, congenitial lamellar ichthyosis என மூன்றாக வகைப்படுத்துவர். 

மேலும் மருத்துவ நிபுணர்கள் மூன்று வகையான மரபணு கோளாறுகளால் ஏற்படும் இத்தகைய பாதிப்பை autosomal recessive congenital ichthyosis, harlequin ichthyosis, congenital ichthyosiform erythroderma என்றும் வகைப்படுத்துவர். 

உடலுக்கு தேவையான தோலை உற்பத்தி செய்யவேண்டிய மரபணுவின் செயற்பாட்டில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே இத்தகைய பாதிப்புக்கு காரணமாகிறது. 

பேறு காலத்தின் போதே தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு இத்தகைய பாதிப்பு 25% முதல் 50% வரை ஏற்படுவதாக ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இத்தகைய அரிய வகை தோல் பாதிப்பிற்குள்ளாகும் குழந்தைகளின் தோல்களில் இறந்த செல்கள் அதிகமாக இருக்கும். சில குழந்தைகளுக்கு இவை பன்னடுக்குகளாகவும் இருக்கக்கூடும். குழந்தைகளுக்கு உரிய காலகட்டத்தில் நடைபெற வேண்டிய இயல்பான தோல் உரிதல் நடைபெறுவதில் இவர்களுக்கு தடைகள் ஏற்படக்கூடும்.

சொரியாசிஸ் என்ற தோல் பாதிப்பிற்கும், இத்தகைய லேமல்லர் இக்தியோஸிஸ் பாதிப்பிற்கும் இடையே வேறுபாடு இருப்பதால், இத்தகைய அரிய வகை பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் குழந்தைகளை மரபணு சிறப்பு மருத்துவர், தோல் மருத்துவ நிபுணர், கண் மருத்துவ நிபுணர் ஆகியோர் முறையாக பரிசோதித்து பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவர்.

பிறகு தோலின் தன்மையை பரிசோதனைகளின் மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பிரத்தியேக களிம்புகள் மற்றும் கிறீம்கள் மூலம் சிகிச்சை வழங்குவர். 

வேறு சிலருக்கு இன்வெஸ்டிகேஷனல் தெரபி எனப்படும் பிரத்யேக சிகிச்சை முறையை பரிந்துரைப்பர். இத்தகைய சிகிச்சையின்போது தோல் எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாமல் இருப்பதற்கான ஆய்வை மேற்கொண்டு அதற்கேற்ப சிகிச்சையை மருத்துவ நிபுணர்கள் வழங்குவார்கள்.

டொக்டர் தீப்தி,
தொகுப்பு அனுஷா.