(நா.தனுஜா)
'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையை அமுல்படுத்துவதற்கு எமது நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் போதுமானவையாகும். பொலிஸார், அரசசேவையாளர்கள் மற்றும் நீதித்துறையின்மீது அழுத்தம் பிரயோகிக்கப்படாவிட்டால் சட்டம் அனைவருக்கும் சமத்துவமான முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.
குறிப்பாக எதிர்க்கட்சியினால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவையும்மீறி இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தமையானது ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் பிரகடனத்திற்கு முற்றிலும் முரணானதாகும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் நாட்டுமக்கள் மத்தியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் அரசாங்கத்தின் செயற்திறனற்ற நிர்வாகத்தினால் சீனி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்டநேரம் வரிசைகளில் காத்திருக்கின்றார்கள். அதனால் மக்களுடைய அன்றாட வாழ்க்கை முழுமையாகப் பாதிப்படைந்திருக்கின்றது.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலமும் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் மூலம் மட்டுமீறிய அதிகாரங்களும் அரசாங்கத்தின் வசமுள்ள போதிலும், அதனைப் பயன்படுத்தி இந்நெருக்கடிக்குரிய தீர்வை அரசாங்கம் வழங்காததன் காரணமாக நாட்டுமக்கள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி உரவிவகாரத்தில் முன்கூட்டிய திட்டமிடலின்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
உரத்தட்டுப்பாட்டினால் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையினால் உற்பத்தியில் 40 சதவீத வீழ்ச்சியேற்படக்கூடும் என்று துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலத்தில் மரக்கறிகளின் விலைகள் பெருமளவால் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு உரத்தட்டுப்பாடுதான் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
அரசாங்கத்தினால் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பிற்கான எந்தவொரு நிவாரணங்களும் வழங்கப்படாமை மக்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கின்றது.
குறிப்பாக உரப்பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள உற்பத்தி வீழ்ச்சிக்குரிய நட்டஈட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை, யானை - மனித மோதலினால் பயிர்கள் அழிவடையநேரிடும் பிரச்சினைக்குரிய தீர்வு முன்வைக்கப்படாமை என்பன வரவு, செலவுத்திட்டத்தின் பிரதான குறைபாடுகளாகும்.
விவசாயிகளுக்கான நட்டஈட்டைப் பெற்றுக்கொடுப்பது குறித்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதி உரியவாறு நிறைவேற்றப்படும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அதுமாத்திரமன்றி இன, மதரீதியில் முரண்பாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவித்து நாட்டின் ஸ்திரநிலையை சீர்குலைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அறியமுடிகின்றது. சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாமிய மதவணக்கஸ்தலமொன்றின்மீது பெற்றோல்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த பௌத்த தேரர்கள், முஸ்லிம் மௌலவிகள், இந்து மற்றும் கத்தோலிக்க மதகுருமார் இணைந்து விசேட கூட்டமொன்றை நடத்தியதுடன் அதில் நாட்டைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
இந்தக் கூட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி புத்திஜீவிகள் பலரும் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தின் நிறைவில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து கூட்டறிக்கையொன்றையும் வெளியிட்டனர்.
நாட்டில் வாழும் பல்வேறு இன, மத சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைகயையும் முழுமையாகத் தோற்கடிப்பதற்கு அவசியமான தூரநோக்கு சிந்தனையையும் தைரியத்தையும் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் விதைக்கவேண்டியதன் அவசியம் தொடர்பில் நன்கறிந்திருப்பதாகவும் அதனை முன்னிறுத்தி அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் அரசியல் மற்றும் ஏனைய தனிப்பட்ட நலன்களை அடிப்படையாகக்கொண்டு, இன மற்றும் மதரீதியான பிளவுகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்படும் குழுக்களைத் தோற்கடிப்பதற்கு நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பில் பலரும் பேசுகின்றார்கள். ஆனால் அதிகாரம் இருப்பவர்கள் அதனை மேலும் பலப்படுத்திக்கொள்ளக்கூடியவகையில் சட்டம் ஒருவிதமாகவும் அதிகாரம் இல்லாதவர்கள் அதனை மேலும் இழக்கும் வகையில் சட்டம் மற்றொருவிதமாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றமையை அனைவரும் உணர்ந்திருக்கின்றார்கள்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.
மிகமோசமான குற்றங்களை இழைத்தவர்கள்கூட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலைசெய்யப்பட்டுள்ளமையினை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM