இதயம் தொடர்பான பாதிப்புகள் வராமல் இருக்க ஒவ்வொருவரும் நாளாந்தம் இரவு 10 மணிமுதல் 11 மணித்தியாலத்திற்குள் உறங்க வேண்டும் என்பதை மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எம்மில் பலரும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கின்றனர். இதனால் அவர்களுக்கு பல்வேறு உடலியக்க உபாதைகள் ஏற்படுகின்றன. 

இரவில் நீண்ட நேரம் கண் விழித்து பணியாற்றுவதால் உடலியக்க கோளாறுகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் மூலம் இவை உறுதி படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரவில் உறங்கும் நேரத்திற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக இரவு 10 முதல் 11 மணிக்குள் உறங்குபவர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவது குறைவு என்றும், இரவு பதினோரு மணிக்கு மேல் கண் விழித்து பணியாற்றுபவர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகள் வருவது அதிகம் என்றும் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.

எம்முடைய உடலில் சர்க்காடியன் ரிதம் என்றும், பயாலஜிக்கல் க்ளாக் என்றும் குறிப்பிடப்படும் உயிரியல் கடிகாரம் உள்ளது. இந்த கடிகார சுழற்சிப்படியே எம்முடைய உடலின் இயக்கம் நடைபெறுகிறது. 

இரவு தாமதமாக உறங்கும்போது உயிரியல் கடிகாரத்தில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாகவே இதய கோளாறு உள்ளிட்ட ஏராளமான உடலியல் கோளாறுகள் ஏற்படுகின்றன.

மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களும், 80 வயதுக்குட்பட்டவர்களும் இரவு 10 மணிக்கு உறங்கினால், அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவது குறைவு என்றும், இரவு 11 மணிக்கு மேல் உறங்குபவர்களுக்கு இதய கோளாறு ஏற்படுவது அதிகம் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஆண்களைப் போல் பெண்களுக்கு இந்த வயதில் இதய பாதிப்பு தொடர்பான சதவீதத்தில் மாற்றம் இருந்தாலும், அவர்கள் மாதவிடாய் நின்றபிறகு இதய பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

எனவே நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களும், 80 வயதுக்குட்பட்டவர்களும் ஆண்களாக இருந்தாலும் அல்லது பெண்களாக இருந்தாலும் நாளாந்தம் இரவு 10 மணிக்குள் படுக்கை அறைக்குச் சென்று உறங்கினால் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

டொக்டர் துர்கா தேவி

தொகுப்பு அனுஷா.