ஜெய் பீம் விவகாரம் தொடர்பாக எமக்கும், படக்குழுவினருக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வரும் அனைவருக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் திரைப்படம் ' ஜெய் பீம்'. ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின்  வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்திருக்கும் இந்த படத்தை பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 

விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற இந்தப் படம், சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறி அது தொடர்பான கண்டன அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். 

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழுவினர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஐந்து கோடி ரூபாய் இழப்பீட்டை ஒரு வார காலத்திற்குள் தரவேண்டும் என்றும் வன்னியர் சங்கம் என்ற அமைப்பின் சார்பில் சட்டத்தரணி மூலம் சூர்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்தும், சூர்யாவிற்கு ஆதரவாகவும் திரைத்துறை சார்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பாரதிராஜா, அமீர், பா. ரஞ்சித், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் தங்களது ஆதரவை சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், காணொளி மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்,''ஜெய் பீம் மீதான இந்த அன்பு அலாதியானது. 

இதை நான் இதற்கு முன் இப்படி ஒரு அன்பை பார்த்ததில்லை. நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி'' என பதிவிட்டிருக்கிறார்.