(எம்.மனோசித்ரா)

இலங்கையில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சருடன் கலந்துரையாடி, கூட்டு செயற்குழுவை விரைவில் கூட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பங்களாதேஷ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஏ.கே.அப்துல் மொமன் மற்றும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


 
இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான ஒத்முதுழைப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்தும் ஒன்றாகும். 

வளைகுடா மற்றும் தரைக்கடல் பகுதிகளுக்கு செல்வதற்காக இலங்கையில் ஒரு போக்குவரத்து மையம் பயன்படுத்தப்பட்டால் சிட்டகொங் மற்றும் இலங்கைத் துறைமுகங்களுக்கு இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பானது நேரம் மற்றும் நிதி வளங்கல் ஆகிய இரண்டையும் மிச்சப்படுத்தி, இரு நாடுகளிலும் வெற்றிகரமான சூழ்நிலை பிரதிபலிக்கப்படும் என அமைச்சர்கள் ஒப்புக் கொண்டனர்.

ஜப்பானின் உதவியுடன் ஆழ்கடல் துறைமுகமாக உருவாக்கப்பட்டு வரும் கொக்ஸ் பஸார் மாவட்டத்தில் உள்ள மதர்பாரி உட்பட பல துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளுடன் பங்களாதேஷில் கப்பல் போக்குவரத்திற்கு பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது முக்கியத்துவமளித்து வருவதை பங்களாதேஷ் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.கடந்த 2014 ஆம் ஆண்டில் கூட்டத்தொடர் டாக்காவில் நடைபெற்றதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக கூட்டுச் செயற்குழுவை விரைவில் கூட்டுவதற்கு அமைச்சர்கள் தீர்மானித்தனர்.

2022 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் கொழும்பில் கூட்டத்தை நடத்துவதற்கு முன்மொழியப்பட்டது. இலங்கையில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சருடன் கலந்துரையாடி, கூட்டு செயற்குழுவை விரைவில் கூட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

தீவன சேவைகள் மற்றும் விரிவான கடலோர கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம் தொடர்பான விடயங்களும் கொழும்பில் நடைபெறும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும். 

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பொருளாதார ஒத்துழைப்பை திருப்தியுடன் சுட்டிக்காட்டிய இரு அமைச்சர்களும் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு கப்பல்துறை ஒரு முக்கிய அங்கமாகும் என்பதை ஒப்புக்கொண்டனர்.