எரிபொருள் இல்லாததால் நாட்டை மூடவேண்டிய நிலையில் அரசாங்கம் - மரிக்கார் 

Published By: Digital Desk 4

17 Nov, 2021 | 09:43 PM
image

(நா.தனுஜா)

எரிபொருளை இறக்குமதி செய்யமுடியாததன் விளைவாக மீண்டும் நாட்டை மூடவேண்டிய நிலையிலிருக்கும் அரசாங்கம், அதற்கான பழியை எம்மீது சுமத்தமுற்படுகின்றது.

அதன் ஓரங்கமாகவே நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தினால் மீண்டும் கொவிட் - 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் தீவிரமடைந்திருப்பதாக அரசாங்கம் பிரசாரம் செய்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது - எஸ்.எம்.மரிக்கார் | Virakesari .lk

அதுமாத்திரமன்றி போராட்டத்தில் கலந்துகொள்வதற்காகக் கொழும்பிற்கு வருகைதந்த மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் பின்னர் மீண்டும் பெருந்திரளான மக்கள் தலைநகருக்கு அழைத்துவரப்படுவர் என்றும் தெரிவித்துள்ள அவர்,  இயலுமானால் அதனைத் தடுக்குமாறு அரசாங்கத்திற்குச் சவால்விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (17) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பல்வேறு தடைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எமது கட்சியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகூறவிரும்புகின்றோம்.

அதேவேளை கடந்த 2001 ஆம் ஆண்டில் காமினி அத்துகோரளவினால் முன்னெடுக்கப்பட்ட மிகப்பாரிய போராட்டத்திற்குப் பிறகு எமது தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட அதனையொத்த மாபெரும் போராட்டமாக இதனைக் குறிப்பிடமுடியும்.

இப்போராட்டத்தில் எமது கட்சி ஆதரவாளர்கள் மாத்திரமன்றி, தமக்கு வாக்களித்த 69 இலட்சம் பேரிலிருந்து பலரும் கலந்துகொள்ளப்போவதை அறிந்து அச்சமடைந்த அரசாங்கம், போராட்டத்தை நிறுத்துவதற்கும் கொழும்பிற்குள் மக்கள் உள்நுழைவதைத் தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

பொலிஸாரால்  பஸ்வண்டிகள் சோதனையிடப்பட்டதைப்போன்று யுத்தகாலத்தில் கூட சோதனையிடப்பட்டதில்லை. இவ்வாறு ஆட்சி நிர்வாகத்தை முன்கொண்டுசெல்லமுடியாது.

இது வெறும் ஆரம்பம் மாத்திரமேயாகும். எதிர்வருங்காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக இதனைவிடவும் பன்மடங்கானோரைத் திரட்டி அழைத்துவருவோம்.

அதேவேளை இன்று போராட்டத்தில் கலந்துகொள்வதற்காகக் கொழும்பிற்கு வருகைதந்த மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் எம்மிடமுள்ளன.

அவைகுறித்து எமது கட்சியின் சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்ததாக அரசாங்கத்தின் செயற்திறனற்ற நிதி நிர்வாகத்தின் காரணமாக சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறையினால் வெளிநாட்டிலிருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்யமுடியாத நிலையில் அரசாங்கம் இருக்கின்றது.

எரிபொருளின்றி நாட்டின் நிர்வாகத்தை உரியவாறு முன்னெடுத்துச்செல்லமுடியாது. எனவே அதற்கான பழியையும் எம்மீது சுமத்துவதற்கு அரசாங்கம் முனையக்கூடும்.

அதன் ஓரங்கமாகவே நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தினால் கொவிட் - 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகப் பிரசாரம் செய்யப்படுகின்றது. எரிபொருளை இறக்குமதி செய்யமுடியாததன் விளைவாக நாட்டை முடக்கவேண்டிய தேவையேற்படுமானால், அதற்கான பழியை எம்மீது சுமத்தவேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.

பொதுஜன பெரமுனவின் சம்மேளனம் நடத்தப்பட்டபோதும் ஜனாதிபதி தலைமையில் பெருமளவானோர் சூழ மதரீதியான நிகழ்வு நடத்தப்பட்டபோதும் தடுப்பூசி வழங்கப்படாத மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டபோதும் பொதுப்போக்குவரத்து சேவைகளில் மக்கள் முண்டியத்துக்கொண்டு செல்லும்போதும் கொவிட் - 19 வைரஸ் பரவல் ஏற்படாதா? என்று கேள்வியெழுப்ப விரும்புகின்றோம்.

அதேவேளை நேற்று முன்தினம் முறையற்ற விதத்தில் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான உரிய சட்டநடவடிக்கை எடுத்ததன் பின்னர், மீண்டும் பெருந்திரளான மக்கள் கூட்டத்தைத் தலைநகருக்கு அழைத்துவருவோம். இயலுமானால் அதனைத் தடுக்குமாறு அரசாங்கத்திற்கு சவால்விடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட...

2026-04-11 13:52:20
news-image

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர் திரும்பும்...

2026-04-11 13:55:09
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: நாடளாவிய ரீதியில்...

2026-04-11 13:22:13
news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:37:56
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29