(எம்.மனோசித்ரா)

இரத்தினபுரி - பணாமுர பிரதேசத்தில் எம்பிலிபிட்டி பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேநபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபரின் ஆலோசனைக்கமைய மேலதிக பொலிஸ் அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் எம்பிலிபிட்டி குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த நபர் பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளாகியதாக எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 12 ஆம் திகதி 14 வயதுடைய சிறுமியைத் தாக்கியதாக பணாமுர பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய பணாமுர பொலிஸ் நிலைய குழுவினரால் நேற்று செவ்வாய்கிழமை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் இன்று புதன்கிழமை அதிகாலை பொலிஸ் தடுப்பு காவலில் தான் அணிந்திருந்த சட்டையின் மூலம் தூக்கிட்டுக் கொண்ட நிலையில், பொலிஸார் மீட்க்கப்பட்டு எம்பிலிபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 38 வயதுடைய கரஹின்னே இந்திக ஜயரத்ன என்ற பணாமுர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். குறித்த சந்தேகநபர் மதுபோதையில் வீட்டுக்கு வருகை தந்து தம்மிடம் முரண்படுவதாக அவரது மனைவியால் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் நிலையத்தில் 7 தடவைகள் முறைப்பாடளித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இரு முறைப்பாடுகளும் , அவற்றில் ஒரு முறைப்பாட்டின் போது குறித்த நபர் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, மற்றைய முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் இரு முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளதோடு , அதன் போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

2020 இல் இரு முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு முறைப்பாட்டின் போது சமாதனம் செய்து வைக்கப்பட்டதோடு , மற்றைய முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இவ்வாண்டிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முறைப்பாடளிக்கப்பட்டு பின்னர் அந்த முறைப்பாடும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபருக்கு 14, 8 மற்றும் 3 வயதுடைய பிள்ளைகள் உள்ளனர். கடந்த 12 ஆம் திகதி 14 வயதுடைய மூத்த மகள் தனது தந்தை தன்னை தாக்கியதாகக் குறிப்பிட்டு குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி 15 ஆம் திகதி வரை எம்பிலிபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதன் போது அவரை கைதுசெய்வதற்கு பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் முயற்சித்த போதிலும் , அவர் பொலிஸாரிடமிருந்து தப்பித்துள்ளார். 

இந்நிலையிலேயே நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை குறித்த நபர் வீட்டில் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸ் குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று தெரியவந்துள்ளது. இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய பொலிஸாரினால் சந்தேகநபர் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்படவில்லை. 

சந்தேகநபர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் நிலையத்தில் இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமை தவறியுள்ளாரா என்ற விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய மேலதிக பொலிஸ் அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் எம்பிலிபிட்டி குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.