(எம்.மனோசித்ரா)

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கான தமது ஒத்துழைப்பை வழங்குவதாக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தென்னாசிய வலயப் பணிப்பாளர் நாயகம் சக்கமொட்டோ டக்கேமா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(16) ஜனாதிபதியை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகத் தான் இருந்தபோது, 'ஜெய்க்கா' நிறுவனத்துடன் ஒன்றிணைந்து பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியுமாக இருந்ததென, ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.

1965ஆம் ஆண்டு முதல், இலங்கையின் 120 அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் தனது பங்களிப்புகளை வழங்கியுள்ளது. 

கடன் பெக்கேஜ் அபிவிருத்தித்திட்ட உதவிகள், அபிவிருத்தித்திட்டமல்லாத உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கடன் நிதியுதவிகளுக்காக, அந்நிறுவனத்தினால்  8,829 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

தற்போது 'ஜெய்க்கா' உதவியின் கீழ் 14 அபிவிருத்தித் திட்டங்கள் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சக்திவலு, நீர்வளங்கள், நீர்வடிகாலமைப்பு, துறைமுகம், போக்குவரத்து, சுகாதாரம், தொலைத்தொடர்பு மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ள இலகுக் கடன்கள், 2,500 மில்லியன் டொலர்களாகும்.

இதுவரை செயற்படுத்திய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் பற்றி தெளிவுபடுத்திய ஜனாதிபதி, விவசாயம், திறன் அபிவிருத்தி, சுகாதாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளுக்காக, எதிர்வரும் வருடத்தில் ஜெய்க்காவின் உதவிகளை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.