கொழும்பை முற்றுகையிட்ட மக்கள் : நாட்டில் புதியதொரு யுகத்தின் உதயத்திற்கு அடித்தளமிடுவோம் - சஜித் சூளுரை

By T Yuwaraj

16 Nov, 2021 | 09:45 PM
image

(நா.தனுஜா)

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் போராட்டத்தைத் தடுத்துநிறுத்தும் நோக்கில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு தடைகளையும் தகர்த்தெறிந்து இன்றைய தினம் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் அலைகடலெனத் திரண்டுவந்த மக்கள் பேரணி கொழும்பு நகரை முற்றுகையிட்டு, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரான நாட்டுமக்களின் அதிருப்தியை வலுவாகப் பதிவுசெய்தது.

காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்த மக்கள் முன்நிலையில் உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திச்செயற்படும் அரசாங்கத்தை நிறுவி இந்த நாட்டில் புதிய யுகமொன்றை உருவாக்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சூளுரைத்தார்.

அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச்செலவு உயர்வு, உரத்தட்டுப்பாட்டின் விளைவாக விவசாயிகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகள் உள்ளடங்கலாக அண்மைக்காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகளுக்கும் செயற்திறனற்ற நிர்வாகத்திற்கும் எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகைதந்த விவசாயிகள், வியாபாரிகள், பல்துறைசார்ந்தவர்கள் உள்ளடங்கலாக பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அரசாங்கத்தின்மீதான தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தடையுத்தரவுக்கோரிக்கை நீதிமன்றங்களால் நிராகரிப்பு

அரசாங்கத்திற்கு எதிரான இந்த மாபெரும் போராட்டத்திற்கு எதிராகத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு சுமார் 90 பொலிஸ்நிலையங்கள் நீதிமன்றங்களில் கோரிக்கைவிடுத்திருந்த போதிலும், அவற்றில் 60 பொலிஸ்நிலையங்களின் கோரிக்கை 12 நீதிமன்றங்களினால் நிராகரிக்கப்பட்டன.

கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸாரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டிருந்த தடையுத்தரவுக்கோரிக்கையும் நேற்றைய தினம் நிராகரிக்கப்பட்டதுடன் சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைவாக போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

ஹைட்பார்க் மைதானத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட போராட்டம்

அரசாங்கத்தினாலும் அதன் கைப்பாவையாகச் செயற்படுகின்ற பொலிஸாரினாலும் எத்தகைய தடைகளும் அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்பட்டாலும், அவற்றைத் தகர்ந்தெறிந்து கொழும்பை நோக்கி மக்கள் படையெடுப்பர் என்றும் போராட்டம் எவ்வகையிலும் நிறுத்தப்படாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பிரகாரம் இன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு கொழும்பிலுள்ள ஹைட்பார்க் மைதானத்தில் மக்களை ஒன்றுதிரளுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் போராட்டத்தைத் தடுத்துநிறுத்துவதற்கான பலதரப்பட்ட முயற்சிகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக போராட்டம் நடைபெறும் இடத்தை நேற்று நண்பகல் 12 மணியளவில் அறிவிப்பதாக இன்று காலை 9.30 மணிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதன்படி நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் வருகைதந்த மக்கள் பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு, சேர்.மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தின் முன்பாகக் குவிந்தனர்.

கோஷங்களும் பதாதைகளும்

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக அலைகடலெனத் திரண்ட மக்கள் நடப்பு அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

'விவசாயத்துறையின் வீழ்ச்சி ஆரம்பம்', 'அரிசி, சீனி, உரம் இல்லை', 'மருந்துப்பொருட்கள் இல்லை', 'ஊழல் மிகுந்த ஆட்சி', 'கொவிட் - 19 மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும்', திருடர்களால் நாடு படுகுழியில்' என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.

அதுமாத்திரமன்றி 'அரசாங்கமே உரத்தை வழங்கு', 'நாட்டில் சீமெந்து இல்லை', 'அரசாங்கம் நாட்டை விற்பனை செய்கின்றது', 'அரிசி, சீனி, உரத்தை வழங்குகின்ற அரசாங்கம் எமக்கு வேண்டும்', சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கின்ற அரசாங்கம் எமக்கு வேண்டும்', 'வெள்ளை வேன் இல்லாத அரசாங்கம் எமக்கு வேண்டும்', 'ராஜபக்ஷாக்களை வரச்சொல்லு, இவற்றுக்கு பதில் கூறச்சொல்லு' என்றவாறு அவர்கள் பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.

அத்தோடு சமையல் எரிவாயு சிலிண்டரைப்போன்ற உருவங்களையும் ஏந்தியிருந்ததுடன் போராட்டக்காரர்களின் சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் முகமூடிகளையும் அணிந்திருந்தனர்.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து ஆரம்பமானது மக்கள் பேரணி

இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகம் முன்பாகத் திரண்டிருந்த மக்கள் கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாகக் கொள்ளுப்பிட்டி சந்தியைநோக்கி நகர ஆரம்பித்தனர். ஹைட்பார்க் மைதானத்தில் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டதுடன், போராட்டத்தின் முடிவில் ஒன்றுகூடவேண்டிய இடம் இறுதிவரை அறிவிக்கப்படாமையினால் ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் சிறிது சிறிதாக வருகைதந்த மக்கள் கூட்டம், பேரணியுடன் இணைந்துகொண்டமையினை அவதானிக்கமுடிந்தது. இவ்வாறு கொள்ளுப்பிட்டியை சந்தியை வந்தடைந்த மக்கள் பேரணி அநகாரிக தர்மபால மாவத்தையின் ஊடாக காலிமுகத்திடலை நோக்கி நகர்ந்தது.

கடும் போக்குவரத்து நெரிசல்

ஆரம்பத்தில் ஹைட்பார்க் மைதானத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த மக்கள் போராட்டம் சடுதியாக எதிர்க்கட்சித்தலைவர் அலுவலக்கத்திலிருந்து ஆரம்பமானதையடுத்து சேர்.மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது. அதன் காரணமாக அவ்வீதிகளில் பஸ்வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களில் மக்கள் நீண்டநேரம் காத்திருந்திருந்தமையினை அவதானிக்கமுடிந்தது.

அதுமாத்திரமன்றி முன்னறிவிப்பின்றி மக்கள் பேரணி கொள்ளுப்பிட்டி சந்தியை நோக்கி நகர ஆரம்பித்ததையடுத்து காலி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை சீர்செய்வதற்குப் பொலிஸார் பெரிதும் சிரமப்பட்டனர். அத்தோடு காலிமுகத்திடலை நோக்கி நகர்ந்த மக்கள் கூட்டம் கோல்பேஸ் ஹோட்டலுக்கு அண்மையிலுள்ள காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தைச்சூழத் தரித்துநின்றமையினால் அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது. அதன் காரணமாக வழமையை விடவும் நேற்றைய தினம் கொழும்பு மாநகரில் போக்குவரத்து நெரிசல் உயர்வாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமூக இடைவெளியின்றி முண்டியடித்துக்கொண்டு நகர்ந்த மக்கள்

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக அகலாத நிலையில், இவ்வாறு பெரும் எண்ணிக்கையான மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களில் ஈடுபடுவது மீண்டுமொரு வைரஸ் பரவல் அலை உருவாக வழிவகுக்கும் என்று ஏற்கனவே சுகாதாரத்தரப்பினர் எச்சரிக்கைவிடுத்திருந்தனர்.

இருப்பினும் உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி ஜனநாயகப்போராட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை மக்களுக்கு இருக்கின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதன்படி நேற்றைய தினம் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்களில் பெருமளவானோர் முகக்கவசங்களை உரியவாறு அணிந்திருந்தபோதிலும், சிலர் முகக்கவசங்களை அணியாமலும் மேலும் சிலர் அவற்றை கீழே இறக்கிவிட்டும் கோஷங்களை எழுப்பியமையினை அவதானிக்கமுடிந்தது.

அதேவேளை இப்போராட்டத்தில் சமூக இடைவெளி பேணப்படவில்லை என்பதுடன் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வேகத்தில் மக்கள் மிகவும் நெருக்கமாகவும் முண்டியடித்துக்கொண்டும் பேரணியாக நகர்ந்து சென்றார்கள்.

காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் மக்கள்முன் உரையாற்றிய சஜித்

மழையையும் பொருட்படுத்தாமல் பேரணியாகச்சென்ற மக்கள் இறுதியில் கோல்பேஸ் ஹோட்டலுக்கு அண்மையிலுள்ள காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் ஒன்றுதிரண்டனர்.

அங்கு மக்கள் படையின் முன் உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் கொழும்பிற்குத் திரண்டுவந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர் கூறியதாவது:

அண்மைக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. சர்வாதிகாரப்போக்கிலான நடவடிக்கைகள் உள்ளடங்கலாகத் தற்போதைய அரசாங்கத்தின் செயற்திறனற்ற நிர்வாகத்தின் காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அவர்கள் அன்றாடம் உணவைக்கூடப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலிருக்கின்றார்கள்.

எமது நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாட்டு நாணயக்கையிருப்புப் பற்றாக்குறையின் காரணமாக சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அதன்மூலம் விரைவு எரிபொருள் இறக்குமதியில் ஈடுபடுவதற்கும் அதனூடாக நிதிமோசடியில் ஈடுபடுவதற்கும் அரசாங்கம் திட்டமிடுகின்றது.

இத்தகைய மிகமோசமான அரசாங்கத்தைத் தோற்கடித்து, இந்த நாட்டின் புதிய யுகமொன்றைத் தோற்றுவிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதனை முன்னிறுத்தி நாட்டுமக்கள் அனைவரும் எம்முடன் இணையவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அவரது உரையைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் அரச எதிர்ப்புப்போராட்டம் முடிவிற்கு வந்ததுடன் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனையடுத்து அப்பகுதியில் ஸ்தம்பிதமடைந்திருந்த போக்குவரத்தும் இயல்புநிலைக்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right